என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இளையோர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
- முதலில் பேட்டிங் செய்த இந்தியா 393 ரன்கள் குவித்தது.
- இந்த தொடக்க வீரர்கள் இருவரும் சதம் விளாசினர்.
இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் முகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
இதில் வைபவ் சூர்யவன்ஷி 74 பந்தில் 127 ரன்கள் சேர்த்தும், ஆரோன் ஜார்ஜ் 106 பந்தில் 118 ரன்கள் சேர்த்தும் ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 227 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது.
பின்னர் 394 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் தென்ஆப்பிரிக்கா இளையோர் அணி பேட்டிங் செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 35 ஓவர்கள் மட்டுமே விளையாடி 160 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டவில்லை. பால் ஜேம்ஸ் அதிகபட்சமாக 41 ரன்களும், டேனியல் போஸ்மேன் 40 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் கிஷன் சிங் 3 விக்கெட்டும், முகமது எனான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.






