என் மலர்
கிரிக்கெட் (Cricket)

TNPL: 7 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தி சேலம் திரில் வெற்றி
- திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
- ராஜ்குமார் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார்.
டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன. கோவையில் இன்று 7வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தடைபட்டது.
சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் 10 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராஜேந்திரன் விவேக் 2 ரன்னிலும், கவின் 3 ரன்னிலும் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஹரி நிஷாந்த் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அடுத்து இறங்கிய சன்னி சந்து அதிரடியில் மிரட்டினார். ஹரி நிஷாந்த் 58 பந்தில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சன்னி சந்து 27 பந்தில் 45 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
4வது விக்கெட்டுக்கு ஹரி நிஷாந்த், சன்னி சாந்து ஜோடி 93 ரன்கள் சேர்த்தது. இறுதியில், சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது. திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான சுஜய் சிவசங்கரன் 4 ரன்கள் மற்றும் கேப்டன் ஜெயராமன் சுரேஷ் குமார் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வசீம் அகமது 16 ரன்களிலும், முகிலேஷ் 2 ரன்களிலும், சஞ்சய் யாதவ் 11 ரன்களிலும், ஜாபர் ஜமால் 2 ரன்களிலும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
சிரமமான சூழ்நிலையில், ஜெகதீசன் கவுசிக் மற்றும் ராஜ்குமார் ஜோடி சேர்ந்தனர். ராஜ்குமார் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அரைசதம் அடித்தார். ஆனால் அவர் ஆட்டமிழந்த பிறகு, சரவண குமார் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜெகதீசன் கவுசிக் 39 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், திருச்சி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் சேலம் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. சேலம் அணியின் மொஹமது அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.