என் மலர்
கிரிக்கெட் (Cricket)

TNPL: 10 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அபாரம்!
- டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து மதுரை 168 ரன்கள் எடுத்தது.
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராம் அரவிந்த் 9 ரன்களில், கேப்டன் சதுர்வேத் 1 ரன்னில் அவுட் ஆகினர்.
பாலசந்தர் அனிருத் நிதானமாக ஆடி 48 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து அதீக் அர் ரகுமான் 36 ரன்களும், சங்கர் கணேஷ் 11 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து மதுரை 168 ரன்கள் எடுத்தது.
நெல்லை அணி தரப்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 3 விக்கெட்டுகளும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
169 ரன்கள் இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் சார்பில் இறங்கிய அஜிதேஷ், சந்தோஷ் குமார், ஹரிஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.
கேப்டன் அருண் கார்த்திக் அதிரடியாக ஆடி 67 ரன்கள் குவித்தார். ரித்திக் ஈஸ்வரன் (25), சோனு யாதவ் (32) ஆகியோரும் ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். ஆனால், மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. மதுரை பாந்தர்ஸ் சார்பில் அதிகபட்சமாக சூர்யா ஆனந்த் 4 விக்கெட்டுகளும், சரவணன், குர்ஜப்நீத் சிங் மற்றும் ராஜலிங்கம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.






