என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி.என்.பி.எல். கிரிக்கெட் ஜூன் 5-ந்தேதி தொடக்கம்: முதல் ஆட்டத்தில் திண்டுக்கல்- கோவை மோதல்
- டிஎன்பிஎல் தொடர் கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல்லில் நடக்கிறது.
- டிக்கெட் விலை இந்த ஆண்டு ரூ.300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஜூலை 6-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திருச்சி கிராண்டு சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
கோவை, சேலம்,நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 8 போட்டிகள் கோவையிலும், சேலத்தில் 9 போட்டிகளும், நெல்லையில் 7 போட்டிகளும் நடத்தப்படுகிறது.
கோவையில் ஜூன் 5-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மறுநாள் 6-ந்தேதி சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டி.என்.பி.எல். சேர்மன் பாலகிருஷ்ணா, தலைமை நிர்வாக அதிகாரி பிரசன்னா கண்ணன், ஸ்ரீராம் கேபிட்டல் தலைவர் ராஜேஷ் சந்திர மவுலி, நெல்லை ராயல் கிங்ஸ் அணி கேப்டன் அருண் கார்த்திக், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் ஆர்.என்.பாபா ஆகியோர் டி.என்.பி.எல். போட்டி குறித்து நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் 'பிளே ஆப்' மற்றும் இறுதிப்போட்டி உள்பட 32 போட்டிகள் நடத்தப்படுகிறது. குவாலி பையர்-1 எலிமினேட்டர் , குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லில் நடை பெறும். இந்த ஆண்டு ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக 6 இரட்டைப் போட்டிகள் நடைபெறு கிறது.
டி.என்.பி.எல். போட்டி தமிழக வீரர்களுக்கு பெரிய வாய்ப்புகளை வழங்கி உள்ளது. வீரர்கள் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் டி.என்.பி.எல். தொடங்கப்பட்டது. இங்கு விளையாடிய வீரர்கள் இந்திய அணியில் தேர்வாகி விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக உள்ள டி.ஆர்.எஸ். முறை தற்போதும் தொடரும்.
கோவை, சேலம் பகுதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. நெல்லையில் நடைபெறும் போட்டிகளுக்கு வருகிற 10 -ந்தேதி டிக்கெட் விற்பனை தொடங்கும். டிக்கெட் விலை இந்த ஆண்டு ரூ.300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன் வழியாகவே விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






