என் மலர்
கிரிக்கெட் (Cricket)

TNPL 2025: இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர் தமிழன்ஸ்!
- திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது.
- அதிகபட்சமாக, துஷர் ரஹாஜே 77 ரன்களும், அமித் சாத்விக் 65 ரன்களும் எடுத்தனர்.
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடந்தது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின .
டாஸ் வென்ற திண்டுக்கல் அணி, திருப்பூர் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்மூலம், திருப்பூர் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது. இதில், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, துஷர் ரஹாஜே 77 ரன்களும், அமித் சாத்விக் 65 ரன்களும் எடுத்தனர்.
புவனேஷ்வர் வெங்கடேஷ், வருண் சக்ரவர்த்தி, கணேஷன் பெரியசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், கார்த்திக் சரண் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
திருப்பூர் அணி நிர்ணயித்த 221 என்கிற வெற்றி இலக்கை அடைந்து கோப்பையை வெல்லும் முனைப்பில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது.
களமிறங்கிய திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் (1), பாபா இந்திரஜித் (9), விமல் குமார் (10), மற்றும் தினேஷ் (3) ஆகிய முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். திருப்பூர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், திண்டுக்கல் அணியின் மற்ற பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன்விளைவாக 14.4 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 102 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றிக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.