என் மலர்
கிரிக்கெட் (Cricket)
3-வது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
- பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சுருண்டனர்.
- முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்த நிலையில், 2-வது இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது.
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டதால் இங்கிலாந்து அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் 267 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜேமி ஸ்மித் அதிகபட்சமாக 89 ரன்களும், டக்கெட் 52 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நோமன் அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 177 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. சாத் ஷகீல் அபாரமாக விளையாடி 134 ரன்கள் விளாசினார். அவருக்கு துணையாக 9-வது வீரராக களம் இறங்கிய நோமன் அலி 45 ரன்களும், 10-வது வீரராக களம் இறங்கிய சஜித் கான் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் சேர்க்க பாகிஸ்தான 344 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ரேஹன் அகமது 4 விக்கெட்டும், சோயிப் பஷீர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 77 ரன்கள் பின்னதங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியால் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் 112 ரன்னில் சுருண்டது. ஜோ ரூட் அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் அணி சார்பில் நோமன் அலி 6 விக்கெட்டும், சஜித் கான் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மொத்தமாக 35 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து முன்னிலைப் பெற்றிருந்தது. 36 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் 37 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது. 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.








