என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிராக 3-வது வீரராக சதம் விளாசிய சல்மான்: பாக். முதல் இன்னிங்சில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்
- பாகிஸ்தான் தரப்பில் ஷபீக், மசூத், சல்மான் ஆகியோர் சதம் விளாசினர்.
- இங்கிலாந்து தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக்- சைம் அயூப் களமிறங்கினர். சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். ஷபீக் 102 ரன்களுடன் கேப்டன் மசூத் 151 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து சிறப்பாக விளையாடி வந்த பாபர் அசாம் முதல் நாள் ஆட்டம் முடிவடைய இருந்த நிலையில் 30 ரன்களில் வெளியேறினார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது.
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சகீல் அரை சதம் விளாசினார். 33 ரன்களில் நசீம் ஷா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஸ்வான் 0 ரன்னில் நடையை கட்டினார். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சகீல் 87 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த அமீர் ஜமால் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகா சல்மான் சதம் விளாசினார். இவருக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்த அப்ரிடி 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அகமது 3 ரன்னில் வெளியேறினார். இதனால் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் தரப்பில் ஷபீக், மசூத், சல்மான் ஆகியோர் சதம் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






