என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிராக கடைசி டி20-யில் இலங்கை ஆறுதல் வெற்றி
- இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 218 ரன்கள் குவித்தது.
- நியூசிலாந்து 20 ஓவரில் 211 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது.
இன்று 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை குசால் பெரேரா (101), சரித் அசலங்கா (46) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.
பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களம் இறங்கியது.
தொடக்க வீரர்களாக டிம் ராபின்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராபின்சன் 21 பந்தில் 37 ரன்கள் விளாசினார். ரச்சின் ரவீந்திரா 39 பந்தில் 69 ரன்கள் குவித்தார். இருவரும் களத்தில் இருக்கும்போது நியூசிலாந்து வெற்றி பெறுவதுபோல் இருந்தது.
அடுத்து வந்த சாப்மேன் 9 ரன்னிலும், பிளிப்ஸ் 6 ரன்னிலும் ஆட்மிழந்தனர். ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்கும்போது 12.2 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் நியூசிலாந்து அணியால் ரன் குவிக்க இயலவில்லை. டேரில் மிட்செல் மட்டும் 17 பந்தில் 35 ரன்கள் அடித்தார். கடைசி 2 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரில் 14 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து. இதனால் கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரிலும் 14 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இலங்கை 218 ரன்கள் அடித்தும் 7 ரன்களில் ஆறுதல் வெற்றியை பெற்றது.
46 பந்தில் 101 ரன்கள் குவித்த குசால் பெரேரா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். நியூசிலாந்து ஜேக்கப் டஃபி தொடர் நாயகன் விருதை வென்றார்.






