என் மலர்
கிரிக்கெட் (Cricket)

3-வது போட்டியில் வெற்றி: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து
- முதலில் நடந்த டி20 தொடரை இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது
- ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.
வெல்லிங்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2-0 என நியூசிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சேல் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் முதல் 4 வீரர்களான ஜேமி ஸ்மித் 5, டக்கெட் 8, ரூட் 2, ஹாரி ப்ரூக் 6 ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 222 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டும் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இருவரும் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. கான்வே 34 ரன்னிலும் ரச்சின் 46 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து வந்த வில் யங் 1 ரன்னிலும் டாம் லாதம் 10, பிரெஸ்வெல் 13 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து மிட்செல் மற்றும் சாட்னர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சாட்னர் 27 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து நாதன் ஸ்மித் 2 ரன்னிலும் கடைசி வரை போராடிய மிட்செல் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 196 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்ததால் ஆட்டம் பரபரப்பானது.
இந்நிலையில் ஜகரி ஃபௌல்க்ஸ்- பிளேர் டிக்னர் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் நியூசிலாந்து அணி 44.4 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.






