என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கடைசி ஓவரில் முகமது நபி 5 சிக்ஸ்: இலங்கைக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
- 19ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார்.
- கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸ் விளாசினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. ரஹ்மதுல்லா குர்பாஸ், செதிக்குல்லா அடல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குர்பாஸ் 14 ரன்னிலும், அடல் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கரிம் ஜனத் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இப்ராகிம் ஜத்ரன் 24 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ரசூலி 9 ரன்னிலும், ஓமர்சாய் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 79 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது. 7ஆவது விக்கெட்டுக்கு முகமது நபி உடன், ரஷித் கான் ஜோடி சேர்ந்தார். ரஷித் கான் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால், முகமது நபி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார்.
கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் வெலாலகே வீசினார். இந்த ஓவரின் முதல் 3 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார் முகமது நபி. அடுத்த பந்தை நோ-பாலாக வீசினார். அடுத்து அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்கருக்கு தூக்கினார். 4ஆவது சிக்ஸ் அடிக்கும்போது 20 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி பந்தில் 2 ரன்களுக்கு ஓடும்போது முகமது நபி ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.






