என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறும் கொல்கத்தா-லக்னோ ஆட்டம் கவுகாத்திக்கு மாற்றம்
- கொல்கத்தாவில் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கும் லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
- கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என்று பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.
மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. முன்னதாக மாலை 6 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகல தொடக்க விழாவும் இடம் பெறுகிறது. ஆனால் அன்றைய தினம் கொல்கத்தாவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடக்க ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி மாலை 3.30 மணிக்கு இதே கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அன்று ராம நவமி கொண்டாட்டம் பல இடங்களில் நடப்பதால் கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என்று பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த ஆட்டத்தை கொல்கத்தாவில் வேறு தேதியில் நடத்த வழியில்லாததால், அதே தேதியில் கவுகாத்திக்கு மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.






