என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. சுழற்பந்து வீச்சாளர்களை வைத்தே 50 ஓவர்களையும் வீசிய வெஸ்ட் இண்டீஸ்
- வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சை பயன்படுத்தவில்லை.
- 5 சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 50 ஓவர்களையும் வீசியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக வங்கதேசதுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சவுமியா சங்கர் 45 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மோதி 3 விக்கெட்டும் அகேல் ஹோசைன், அலிக் அதனேஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
முன்னதாக இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சை பயன்படுத்தவில்லை. 5 சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 50 ஓவர்களையும் வீசியுள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சம்பவம் முதல் முறையாக அரங்கேறியுள்ளது.
அகேல் ஹோசைன், ரோஸ்டன் சேஸ், காரி பியர், குடகேஷ் மோதி, மற்றும் அலிக் அதனேஸ் ஆகியோர் 10 ஓவர்கள் வீசியுள்ளனர். இதன்மூலம் 50 ஓவர் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்திய முதல் நாடாக வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைத்துள்ளது.






