என் மலர்
கிரிக்கெட் (Cricket)

எதிரணியை கட்டுப்படுத்தியது இலக்கை எளிதாக அடைய உதவியது- ஆட்டநாயகன் விருது வென்ற ஷிவம்சிங் கருத்து
- முதலில் விளையாடிய கோவை அணி 149 ரன்கள் எடுத்தது.
- திண்டுக்கல் அணி 17.2 ஓவரில் 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கோவை:
9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை, நெல்லை, சேலம், திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இத்தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி-முன்னாள் சாம்பியன் கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பி. சச்சின் 51 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் அணி தரப்பில் அஸ்வின், சந்தீப் வாரியர், பெரியசாமி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஷிவம் சிங் 50 பந்தில் 82 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிவம் சிங் கூறியதாவது:-
நாங்கள் அவர்களை (கோவை) ஒரு நல்ல ரன் இலக்குக்குள் கட்டுப்படுத்தினோம். இது எங்களுக்கு இலக்கை எளிதாக துரத்த உதவியது. ஒரு சீனியர் வீரராக கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.






