என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2வது டி20 போட்டி: 83 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம்
- முதலில் பேட் செய்த வங்காளதேசம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 15.1 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.
தம்புல்லா:
வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 1-0 எனவும், ஒரு நாள் தொடரில் 2-1 எனவும் இலங்கை அணி கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 76 ரன்னில் அவுட்டானார். ஷமிம் ஹொசைன் 48 ரன்னும், தவ்ஹித் ஹிருடோய் 31 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் பினுரா பெர்னாண்டோ 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. வங்காளதேச அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 32 ரன்னும், டாசன் ஷனகா 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இலங்கை அணி 15.2 ஓவரில் 94 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்காளதேசம் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமனிலை செய்தது.
வங்காளதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம், மொஹமது சைபுதின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது லிட்டன் தாசுக்கு அளிக்கப்பட்டது.






