என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி: சிராஜ்-க்கு ஓய்வு: அறிமுகமாகும் அர்ஷ்தீப் சிங்?
- இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை தொடங்குகிறது.
- சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.
லண்டன்:
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த ஆட்டத்திற்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முகமது சிராஜ் முதல் 2 போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடியுள்ளதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு 3-வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதனாலும், இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானத்தில் கூடுதல் சாதகம் இருக்கும் என்பதனாலும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.






