என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜூனியர் உலக கோப்பையில் இந்தியா சிறப்பாக விளையாடும்- கேப்டன் ரோகித் நம்பிக்கை
    X

    ஜூனியர் உலக கோப்பையில் இந்தியா சிறப்பாக விளையாடும்- கேப்டன் ரோகித் நம்பிக்கை

    • இந்திய ஜூனியர் ஹாக்கி அணியினர் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சி பெற்று வருகிறது.
    • சொந்த நாட்டு ரசிகர்கள் முன்பு விளையாடுவதை நன்றாக உணர்கிறேன்.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை சென்னை, மதுரையில் நடக்கிறது.

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

    போட்டியை நடத்தும் இந்தியா 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. சிலி, சுவிட்சர்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. 28-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி சிலியை எதிர் கொள்கிறது.

    உலக கோப்பையில் விளையாடுவதற்காக ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி ஏற்கனவே சென்னை வந்து விட்டது. அதைத் தொடர்ந்து வங்கதேசம், அர்ஜென்டினா அணிகளும் வந்துள்ளன.

    இந்திய ஜூனியர் ஹாக்கி அணியினர் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சி பெற்று வருகிறது.

    பயிற்சிக்கு பிறகு பேட்டி அளித்த கேப்டன் ரோகித், ஜூனியர் உலக கோப்பையில் சிறப்பாக ஆடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனக்கு எந்தவித நெருக்கடியும் இருப்பதாக நினைக்கவில்லை. நான் இயல்பாகவே இருக்கிறேன். அணியில் 4 முதல் 5 சீனியர் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு வழிகாட்டுவார்கள். அவர்கள் கடந்த காலத்தில் கேப்டனாக பணியாற்றினார்கள். நெருக்கடியை எப்படி கையாள்வது என்பதை பற்றி பயிற்சியாளர் எங்களுக்கு அறிவுறுத்துவார்.

    சொந்த நாட்டு ரசிகர்கள் முன்பு விளையாடுவதை நன்றாக உணர்கிறேன். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. ஜூனியர் உலக கோப்பையில் நாங்கள் சிறப்பாக ஆடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு ரோகித் கூறி உள்ளார்.

    பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் கூறும் போது, கேப்டன் ரோகித் ஒரு அற்புதமான வீரர். அணியில் மிகவும் அங்கீகரிக்கப்பட்டவர். 4 சீனியர் வீரர்களில் அவர் கேப்டனாக உள்ளார். அவர்கள் ஒருவரை ஒருவர் மதிக்கிறார்கள். கேப்டனாக அவர் தேர்வானது கூட்டு முடிவு என்றார்.

    21 வயதான ரோகித் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் டப்ரா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். 2022-ம் ஆண்டு ஜூனியர் அணியில் இணைந்தார். ஆசிய கோப்பை மற்றும் சுல்தான் ஜோகா் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இதனால் டிராக்பிளிக்கரான அவர் சில சீனியர்களை விட கேப்டனாக தேர்வு பெற்றார்.

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி திருவிழா 13 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக சென்னை, மதுரை மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த ஹாக்கி திருவிழாவை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர்.

    Next Story
    ×