என் மலர்
விளையாட்டு

Asia Cup Hockey ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக்: சீனாவை 4-3 என வீழ்த்தியது இந்தியா..!
- முதல் 15 நிமிடத்தில் சீனா 1-0 என முன்னிலை பெற்றது.
- 30 நிமிட ஆட்ட முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.
8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இன்று பீகாரில் உள்ள ராஜ்கிரில் தொடங்கியது. "ஏ" பிரிவில் இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான் அணிகள் இடம் பிடித்துள்ளன. "பி" பிரிவில் தென்கொரியா, மலேசியா, வங்கதேசம், சீன தைபே அணிகள் இடம் பிடித்துள்ளன.
இன்று இந்தியா முதல் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 4-3 என வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்தியா நாளைமறுநாள் தனது 2ஆவது போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.
இதில் முதல் இடம் பிடிக்கும் அணி, அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெறும். ஹர்மன்ப்ரீத் சிங் 20, 33, 47 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்தார். ஜுக்ராஜ் சிங் 18ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். சீனா 12, 35, 41 ஆவது நிமிடங்களில் கோல் அடித்தது.
ஆட்டத்தின் முதல் கால்பகுதி நேரத்தின்போது, 12ஆவது நிமிடத்தில் சீனாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஷியாயோ டு கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக இந்திய வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் 15 நிமிடத்தில் சீனா 1-0 என முன்னிலைப் பெற்றது.
2ஆவது 15ஆவது நிமிடத்தில் இந்தியா இரண்டு கோல் அடித்தது. 18ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஜுக்ராஜ் சிங் கோல் அடித்தார். 20ஆவது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது, இதை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் 30 நிமிட ஆட்டத்தில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது.
அதன்பின் சீனாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க 35ஆவது நிமிடத்தில் பென்ஹாய் சென் கோல் அடித்தார். 41ஆவது நிமிடத்தில் சீன வீரர் ஜியேஷெங் கயோ கோல் அடிக்க, ஸ்கோர் 3-3 என சமநிலைப் பெற்றது.
கடைசி கால் பகுதி ஆட்டத்தின்போது, இந்தியா இரண்டுக்கும் அதிகமான பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. அதில் ஒன்றை (47) நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் கோலாக மாற்றினார். இதனால் இந்தியா 4-3 என வெற்றி பெற்றது.






