search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேஎல் ராகுல் - ஷ்ரேயாஸ் அய்யர்
    X
    கேஎல் ராகுல் - ஷ்ரேயாஸ் அய்யர்

    லக்னோவுடன் இன்று மோதல்- பிளேஆப் சுற்று வாய்ப்பில் கொல்கத்தா அணி நீடிக்குமா?

    லக்னோ அணி கொல்கத்தாவை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்யும் ஆர்வத்தில் உள்ளது.
    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 10 அணிகளுக்கும் தலா 13 ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஒவ்வொரு அணியும் இன்னும் ஒரு போட்டியில் ஆட வேண்டும். மொத்தம் இன்னும் 5 லீக் ஆட்டம் எஞ்சி உள்ளன.

    லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 20 புள்ளியுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 4 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன.

    பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற 3 இடங்களுக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 7 அணிகள் உள்ளன.

    இதில் ராஜஸ்தானும், லக்னோவும் கிட்டத்தட்ட தகுதி பெறும் நிலையில் உள்ளன. இரு அணிகளும் தலா 16 புள்ளிகளுடன் இருக்கின்றன. கடைசி போட்டிகளில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் முன்னேறும்.

    ராஜஸ்தான் அணி சி.எஸ்.கே.வையும், லக்னோ அணி கொல்கத்தவையும் கடைசி ஆட்டத்தில் எதிர் கொள்கின்றன. இந்த ஆட்டங்களில் தோற்றாலும் அந்த அணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. அதே நேரத்தில் மிகவும் மோசமாக தோற்றால் மட்டுமே தகுதி பெற முடியாத நிலை ஏற்படும். ராஜஸ்தானும், லக்னோவும் ரன்ரேட்டில் நல்ல நிலையில் உள்ளன.

    டெல்லி, பெங்களூரு அணிகள் 14 புள்ளிகளுடனும், கொல்கத்தா, பஞ்சாப், ஐதராபாத், அணிகள் 12 புள்ளிகளுடனும் உள்ளன.

    டெல்லி கடைசி ஆட்டத்தில் மும்பையையும் (21-ந் தேதி), பெங்களூர் அணி குஜராத்தையும் (நாளை) சந்திக்கின்றன. டெல்லி, பெங்களூர் அணிகளில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்றாலே கொல்கத்தா, பஞ்சாப், ஜதராபாத் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விடும்.

    இந்த 3 அணிகளும் வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் பெங்களூர், டெல்லி அணிகள் தோற்க வேண்டும். அதே நேரத்தில் கடைசி ஆட்டத்தில் 3 அணிகளும் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் 5 அணிகளும் 14 புள்ளிகளுடன் இருக்கும். ஒரு அணி ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறும்.

    டெல்லி அணி ரன் ரேட்டில் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. பெங்களூர் அணி ரன்ரேட்டில் மோசாக இருப்பதால் அந்த அணி கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    மும்பை டி.ஒய் பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் மோது கின்றன.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தா அணி 14 புள்ளியுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். தோற்றால் வெளியேற்றப்படும்.

    லக்னோ அணி கொல்கத்தாவை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்யும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி இதற்கு முன்பு 75 ரன்னில் கொல்கத்தாவை தோற்கடித்து இருந்தது. 
    Next Story
    ×