என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி
    X
    தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி

    தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது வெற்றி

    தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி 90-50 என்ற புள்ளிக்கணக்கில் மிசோரமை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
    சென்னை:

    தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

    இதன் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் ஆக மொத்தம் 31 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

    தமிழக அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. உத்தரகாண்ட், டெல்லி, மிசோரம் ஆகியவை அந்த பிரிவில் உள்ளன. தமிழக பெண்கள் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியன் ரெயில்வே, டெல்லி, மராட்டியம் ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.

    தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்டது. இதில் தமிழ்நாடு 85-47 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. தமிழக பெண்கள் அணி முதல் ஆட்டத்தில் 62-100 என்ற புள்ளி கணக்கில் பலம் வாய்ந்த இந்தியன் ரெயில்வேயிடம் தோற்றது.

    தமிழக அணி 2-வது ஆட்டத்தில் மிசோரமை இன்று எதிர்கொண்டது. இதில் தமிழ்நாடு 90-50 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் 98-50 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.

    பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டத்தில் கேரளா 56-32 என்ற கணக்கில் மத்திய பிரதேசத்தை தோற்கடித்தது.

    தமிழக பெண்கள் அணி 2-வது ஆட்டத்தில் டெல்லியை இன்று மாலை 5.30 மணிக்கு எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் தோற்ற தமிழக மகளிர் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    இன்று நடைபெறும் மற்ற ஆண்கள் பிரிவு ஆட்டங்களில் சர்வீசஸ்- ராஜஸ்தான், இந்தியன் ரெயில்லே- அரியானா, உத்தரபிரதேசம்- கர்நாடகா, மேற்கு வங்காளம்-மத்திய பிரதேசம், குஜராத்- தெலுங்கானா, அணிகள் மோதுகின்றன.

    பெண்கள் பிரிவில் நடைபெறும் மற்ற ஆட்டங்களில் கர்நாடகா-பஞ்சாப், அரியானா-தெலுங்கானா, ரெயில்வே-மராட்டியம், ஒடிசா-அசாம், ராஜஸ்தான்-மேற்கு வங்காளம் அணிகள் மோதுகின்றன. 

    Next Story
    ×