என் மலர்
விளையாட்டு

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தது.
ஹேமில்டன்:
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் 62 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது.
இந்திய அணி 3-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை இன்று எதிர்கொண்டது. மிதாலி ராஜ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஸ்மிரிதி மந்தானாவும், யாஷிகா பாட்டியாவும் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். யாஷிகா 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 21 பந்துகளில் 6 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.
அடுத்து களம் வந்த கேப்டன் மிதாலி ராஜ் 5 ரன்னிலும், தீப்தி ஷர்மா 15 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் இந்திய அணி 13.5 ஓவர்களில் 78 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது.
4-வது விக்கெட்டான மந்தனா-ஹர்மன்பிரீத் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு அபாரமாக விளையாடினர். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்தை விளாசி தள்ளினர்.
இருவரும் சதம் அடித்தனர். மந்தனா முதலில் 108 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 100 ரன்னைத் தொட்டார். 25 வயதான அவர் 5-வது முறையாக (67-வது போட்டி) சதம் அடித்தார்.
அதைத் தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர் 100 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் செஞ்சுரி அடித்தார். 114-வது போட்டியில் விளையாடும் அவருக்கு இது 4-வது சதமாகும்.
மந்தனா 123 ரன் எடுத்திருந்த போது ஆட்டம் இழந்தார். 119 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 262 ஆக (42.3 ஓவர்) இருந்தது. மந்தனாவும், ஹர்மன்பிரீத் கவுரும் 4-வது விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது முக்கிய அம்சமாகும்.
அதைத் தொடர்ந்து இந்திய விக்கெட்டுகள் சரிந்தது. ரிச்சாகோஷ் 5 ரன்னிலும், பூஜா 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஹர்மன்பிரீத் கவுர் 109 ரன்னில் 7-வதாக அவுட் ஆனார். அவர் 107 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். ஜூலன் கோஸ்வாமி 2 ரன்னில் அவுட் ஆனார்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன் குவித்தது. சினேகா ரானா 2 ரன்னும், மேக்னா சிங் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இதனையடுத்து 318 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு டியான்ட்ரா டாட்டின்- ஹெய்லி மேத்யூஸ் ஜோடி 100 ரன்களை எடுத்து அசத்தலான அடித்தளம் கொடுத்தது. டியான்ட்ரா டாட்டின் 62 ரன்கள் எடுத்தும் ஹெய்லி மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரானா3 விக்கெட்டுகளையும் மேக்னா சிங் 2 விக்கெட்டுகளையும் கோ ஸ்வாமி, ராஜேஸ்வரி, பூஜா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஒரு கட்டத்தில் 100 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 62 ரன்கள் எடுப்பதற்குள் 10 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...மகளிர் உலகக்கோப்பையில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா-ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி
Next Story






