search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் வாரியம்
    X
    தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் வாரியம்

    தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல்.போட்டிகள்? - பி.சி.சி.ஐ. ஆலோசனை

    நடப்பாண்டு ஐ.பி.எல் போட்டிகளை தென் ஆப்பிரிக்காவில் நடத்திக் கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    புதுடெல்லி :

    2022 ஐ.பி.எல். டி20 போட்டி தொடர் வரும் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாதம் கடைசி வரை நடைபெறும் என  இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. எனினும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் இந்த ஆண்டும் இந்தியாவில் நடைபெறாது என கூறப்படுகிறது. அதனால் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. 

    இந்த நிலையில் நடப்பாண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ.க்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்றது. கொரோனா தொடர்பான எந்த வித சிக்கல்களும் இல்லாமல் இந்த தொடர் முடிவடைந்துள்ளது.  இடையூறு இன்றி இந்த தொடர் நிறைவடைந்ததற்காக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித், பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார். 

    இதன் தொடர்ச்சியாக  ஐ.பி.எல். டி20 போட்டி தொடரையும் தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

    கடந்த ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரக நாட்டை விட தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவது மலிவானது என அந்நாடு குறிப்பிட்டுள்ளது. குறைந்தபட்ச விமானப் பயணம் உள்ள இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்றும் ஐ.பி.எல் உரிமையாளர்களுக்கான செலவுகளைக் குறைப்பது என்ற திட்டத்தின் கீழ் இந்த போட்டிகளை நடத்தலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  

    இதன்படி ஜோகன்னஸ்பர்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு கிரிக்கெட் மைதானங்களில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கான திட்டத்தை தென் ஆப்பிரிக்கா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  தென் ஆப்பிரிக்காவின் கோரிக்கையை பி.சி.சி.ஐ பரிசீலிப்பதாகவும், இது தொடர்பாக இரு கிரிக்கெட் வாரியங்கள் இடையே விவாதங்கள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    Next Story
    ×