search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    5 விக்கெட் வீழ்த்திய பவுல்ட்
    X
    5 விக்கெட் வீழ்த்திய பவுல்ட்

    கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட்: 126 ரன்னில் சுருண்டு வங்காளதேசம் பரிதாபம்

    டாம் லாதம் இரட்டை சதம், கான்வே சதம் விளாச நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய வங்காளதேசம் 126 ரன்னில் சுருண்டது.
    நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மவுங்கானுயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்காளதேசம் அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. டாம் லாதம், டேவன் கான்வே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. டாம் லாதம் 186 ரன்களுடனும், கான்வே 99 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய டாதம் லாதம் இரட்டை சதம் விளாசினார். கான்வே சதம் அடித்தார். டாம் லாதம் 373 பந்தில் 252 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 109 ரன்னில் ரன்-அவுட் ஆனார். டாம் பிளண்டல் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வங்காளதேசம் அணி சார்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், எபாடாட் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இரட்டை சதம் அடித்த டாம் லாதம்

    பின்னர் வங்காளதேச அணி களம் முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடியதால் இந்த டெஸ்டில் கடும் போட்டி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் பவுல்ட், சவுத்தீ பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேச வீரர்கள் சீட்டுக்கட்டை போல் சரிந்தனர். தொடக்க வீரர்கள் ஷத்மான் இஸ்லாம் (7), முகமது நைம் (0), அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (4), மொமினுல் ஹக் (0), லிட்டோன் தாஸ் (8) சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    முதல் 12 ஓவருக்கும் ஐந்து விக்கெட்டுகளை சாய்த்து வங்காளதேசத்தை திணறடித்தனர் பவுல்ட், சவுத்தீ. அதன்பின் வந்த யாசிர் அலி, நுருல் ஹசன் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினர். யாசிர் அலி 95 பந்தில் 55 ரன்களும், ஹசன் 62 பந்தில் 41 ரன்களும் எடுத்து வெளியேறினார்.

    சதம் அடித்த கான்வே

    இந்த இருவரையும் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழக்க வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. அந்த அணியால் 41.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி முடிந்தது. நியூசிலாந்த அணி சார்பில் டிரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டும், டிம் சவுத்தீ 3 விக்கெட்டும், கைல் ஜாமிசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    வங்காளதேச அணி ஆல்-அவுட் ஆனதுடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது வரை வங்காளதேசம் 395 ரன்கள் பின்தங்கி பாலோ-ஆன் ஆனது. நாளை 3-வது ஆட்டம் தொடங்கும்போதுதான் நியூசிலாந்து பாலோ-ஆன் கொடுக்குமா? அல்லது தொடர்ந்து விளையாடுமா? என்பது தெரிய வரும்.
    Next Story
    ×