search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்து வீரர்கள்
    X
    நியூசிலாந்து வீரர்கள்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் வங்காளதேசம்

    வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து 17 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில், கைவசம் 5 விக்கெட்டுகளை மட்டுமே வைத்துள்ளது.
    நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவுன்ட் மவுங்கானுயில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து டேவன் கான்வே (122) சதத்தால் 328 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 458 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜாய் 78 ரன்களும், ஷான்டோ 64 ரன்களும், கேப்டன் மொமினுல் ஹக் 88 ரன்களும், விக்கெட் கீப்பர் லிட்டோஸ் தாஸ் 86 ரன்களும் சேர்த்தனர்.

    130 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. வங்காளதேச அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீச நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. டாம் லாதம் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவன் கான்வே 13 ரன்னில் வெளியேறினார்.

    ஆனால் வில் யங் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் டெய்லர் ஒரு பக்கம் நிற்க, மறுபக்கம் ஹென்றி நிக்கோல்ஸ், டாம் பிளன்டெல் அடுத்தடுத்து டக்அவுட் ஆகி வெளியேறினார்.

    ராஸ் டெய்லர்

    இதனால் 4-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 147 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ராஸ் டெய்லர் 37 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை நியூசிலாந்து 17 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நாளைய 5-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினால் வங்காளதேச அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    100 ரன்களுக்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் வங்காளதேசம் சேஸிங் செய்து நியூசிலாந்து மண்ணில் பதிவு செய்து சாதனைப் படைக்கும்.
    Next Story
    ×