search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேவாக்
    X
    சேவாக்

    ரஹானேவை நீக்குவதற்கு முன் உள்நாட்டு போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்: சேவாக் சொல்கிறார்

    இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் 109 ரன்கள் மட்டுமே அடித்த ரஹானேவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என விமர்சனம் எழுந்துள்ளது.
    இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரஹானே. இந்திய ஆடுகளத்தில் விளையாடுவதைவிட வெளிநாட்டு ஆடுகளத்தில் விளையாடுவதில் சிறந்தவர். ஆஸ்திரேலியா மண்ணில் இவர் தலைமையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

    ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு டெஸ்டில் ஏழு இன்னிங்சில் பேட்டிங் செய்தார். அதில் அவரால் 109 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. சராசரி 15.57 ஆகும். மேலும் இந்த ஆண்டில் 19 டெஸ்ட் இன்னிங்சில் 372 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

    இதனால் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் இருந்து ரஹானேவை நீக்க வேண்டும் என விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் உள்நாட்டு தொடரில் ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதில் சரியாக விளையாடவில்லை என்றால், அவரை அணியில் இருந்து நீக்கலாம் என சேவாக் தெரிவித்துள்ளார்.

    சேவாக் இதுகுறித்து கூறுகையில் ‘‘ஒரு பேட்ஸ்மேனின் வெளிநாட்டு தொடர் மோசமான முடிவடைந்தால், அவர்களுக்கு உள்நாட்டு தொடரில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனென்றால், வெளிநாட்டு தொடர் நான்கு வருடத்திற்கு ஒருமுறைதான் வரும். ஆனால் இந்திய வீரர்கள் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் விளையாட முடியும்.

    இந்தியாவிலும் மோசமான தொடராக முடிவடைந்தால், அதன்பின் அவருடைய ஆட்டம் குறித்து ஆலோசனை நடத்தி அணியில் இருந்து நீக்க முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

    ரஹானே

    நட்சத்திர பேட்ஸ்மேன்கள் கூட 8 முதல் 9 டெஸ்ட் போட்டிகள் வரை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு அரைசதம் கூட அடித்திருக்கமாட்டார்கள். அதன்பின் விடா முயற்சியின் காரணமாக மீண்டும் நல்ல நிலைக்கு வந்து 1200 முதல் 1500 ரன்கள் வரை ஒரே வருடத்தில் அடித்திருக்கிறார்கள்.

    ரஹானேவுக்கு இந்தியாவில் நடைபெறும் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதில் அவர் சரியாக விளையாடவில்லை என்றால், அதன்பின் உங்களுடைய பங்களிப்பிற்கு நன்றி என்று நீங்கள் சொல்ல முடியும்’’ என்றார்.
    Next Story
    ×