என் மலர்
செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டியில் பவானி தேவி பங்கேற்கிறார்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள தமிழர்கள்
125 வருட ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சார்பில் ஒரு பெண் பாய்மர படகு போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
பவானி தேவி
தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். டோக்கியோ ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டியில் பவானி தேவி பங்கேற்கிறார். 27 வயதான இவர் 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். 2010 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற 2010 இண்டர்நேஷனல் ஓபன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் வெண்கல பதக்கம் வென்றார். 2014 ஆண்டு நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பவானி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். வாள் வீச்சு போட்டியில் உலக அளவிலான தரவரிசை பட்டியலில் பவானி தேவி 42-வது இடத்தில் உள்ளார். வாள் வீச்சு பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியர் பவானி தேவி என்பது குறிப்பிடத்தக்கது.
125 வருட ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சார்பில் ஒரு பெண் பாய்மர படகு போட்டியில் பங்கேற்ற தேர்வாகியுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை 9 இந்தியர்கள் தான் பாய்மர போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்கள்.
இந்தியா சார்பில் பாய்மர படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆகும். சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
23 வயதான நேத்ரா குமணம் 1997 ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்தார். ஆனால், 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாய்மர படகு போட்டி சங்கம் நடத்திய பயிற்சி வகுப்புகளில் இருந்து தனது 12 வயதில் நேத்ராவின் பயணம் தொடங்கியது.
பாய்மர படகுப்போட்டி தவிர டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளிலும், பரதநாட்டியத்திலும் நேத்ரா கைதேர்ந்தவராக உள்ளது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்றபோதே பாய்மர படகு போட்டியில் நேத்ரா இரண்டு முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
நேத்ராவின் தம்பி நவீனும் பாய்மர படகு போட்டி வீரராக உள்ளார். தனது சகோதரனுக்கு பயிற்சி அளித்து தேசிய அளவிலான வீரராக நேத்ரா உருவாக்கியுள்ளார். ஓமன் நாட்டில் நடைபெற்ற முசானா பாய்மர படகு போட்டியில் லேசர் டேடியல் பிரிவில் பங்கேற்ற நேத்ரா 2-வது இடத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றிதான் நேத்ராவுக்கு ஒலிம்பிக் வரை கொண்டு சென்றுள்ளது. ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ம் தேதி தொடங்குகிறது. நேத்ராவின் பாய்மர படகு போட்டி ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது.
மேலும், ஒரு சாதனை என்னவென்றால் இந்தியாவில் இருந்து பாய்மர படகு போட்டியில் 3 பிரிவுகளிலும் பங்கேற்கும் முதல் வீராங்கணை ஆவார். லேசர் ரேடியல், லேசர் ஸ்டேண்டர், 49 இ ஆர் என மூன்று விதமான போட்டிகளிலும் நேத்ரா பங்கேற்கிறார்.
அதேபோல், 2020 ஜனவரியில் மியாமியில் நடைபெற்ற ஹெம்பல் உலக கோப்பை போட்டியின் மூலம் நேத்ரா உலக அளவில் புகழ்பெற்றார். அந்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நேத்ரா இந்தியாவிலும் பாய்மர படகு போட்டியாளர்கள் இருக்கிறோம் என்று கூறினார்.
பின்னர் ஸ்பெயின் நாட்டிலேயே தங்கி ஹங்கேரி நாட்டின் வீரர் தாமஸ் இடம் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார். இவரிடம் பயிற்சிக்கு சென்ற பின்னர் நேத்ராவின் விளையாட்டு யுக்திகள் வெகுவாக மாறியுள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர்.
விஷ்ணு சரவணன்

தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்ணு சரவணன் ராணுவ வீரர் ஆவார். இவர் பாய்மர படகுப்போட்டியில் லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு யூத் தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹாங்காங் சீரிஸ் போட்டியில் விஷ்ணு சரவணன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக படகுப்போட்டியில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான லேசர் யூத் பிரிவில் விஷ்ணு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
கே.சி. கணபதி
கேசி கணபதி தமிழ்நாட்டை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த கணபதி 1995 நவம்பர் 18-ம் தேதி பிறந்தார். 25 வயதான கணபதி ஆண்கள் இரட்டையர் ஸ்கீப் 49இஆர் படகுப்போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். கேசி கணபதிக்கு ஜோடியாக வருண் தாக்கரும் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். கேசி.கணபதி மற்றும் வருண் தாக்கர் ஜோடி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் ஸ்கீப் 49இ ஆர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
வருண் தக்கர்
வருண் தக்கர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இரட்டையர் ஸ்கீப் 49இஆர் படகுப்போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். கேசி கணபதிக்கு ஜோடியாக வருண் தாக்கர் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். கேசி.கணபதி மற்றும் வருண் தாக்கர் ஜோடி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் ஸ்கீப் 49இ ஆர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
சரத்கமல்
சரத்கமல் தமிழ்நாட்டை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த சரத் 1982 ஆம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிறந்தார். இவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இவர் பங்கேற்கிறார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஒற்றையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் சரத்கமல் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சரத்கமல் தங்கம் வென்றார்.
சத்தியன் குணசேகரன்
சென்னையை சேர்ந்த சத்தியன் குணசேகரன் 1993 ஜனவரி 8-ம் தேதி பிறந்தார். 28 வயதனான சத்தியன் குணசேகரன் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 2016, 2017 ஆண்டுகளில் நடைபெற்ற சர்வதேச டேபிள் பெடரேஷன் சேலஞ் போட்டிகளில் சத்தியன் குணசேகரன் தங்கம் (மொத்தம் 2) வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியில் சத்தியன் தங்கம் வென்றார்.
இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் பிறந்தார். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்த இவர் தனது இரண்டாவது வயதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கு குடி பெயர்ந்தார். இவர் 2012 ஆம் ஆண்டு தனது 12-வது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். டோக்கியோ ஒலிம்பிக்கின் துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இளவேனில் பங்கேற்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச்சூடுதல் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆரோக்கிய ராஜீவ்
ஆரோக்கிய ராஜீவ் தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர். இவர் 1999 மே 22-ம் தேதி பிறந்தார். 30 வயதான ராஜீவ் ஒலிம்பிக்கில் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 2017 ஆசியன் சாம்பியன்ஷிப் மற்றும் 2018 ஆசியன் விளையாட்டில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் ஆரோக்கிய ராஜீவ் உடன் அமோஜ் ஜேக்கப், முகமது அனாஸ் யாஹியா, நோஹா நிர்மல் டாம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Next Story






