search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 விக்கெட் வீழ்த்திய ரபாடா
    X
    5 விக்கெட் வீழ்த்திய ரபாடா

    வெஸ்ட் இண்டீசை இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் டி காக் பொறுப்புடன் ஆடி 141 ரன்கள் குவித்தார்.
    செயின்ட் லூசியா:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    சிறப்பாக பந்துவீசிய தென் ஆப்பிரிக்க அணியின் லுங்கி நிகிடி 5 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்ஜே 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 322 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய டி காக் 170 பந்துகளில் 141 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மார்கிராம் 60 ரன்னும், வான் டர் டுசன் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், ஜேடன் சீலஸ் 3 விக்கெட்டும், ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்டநாயகன் விருது வென்ற டி காக்

    இதையடுத்து, 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    முதல் இன்னிங்ஸ் போலவே 2-வது இன்னிங்சிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. ரோஸ்டன் 21 ரன்னிலும், பிளாக் வுட் 12 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ரோஸ்டன் சேஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 62 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், அன்ரிச் நோர்ஜே 3 விக்கெட்டும், கேசவ் ம்காராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது டி காக்கிற்கு வழங்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஜூன் 18-ம் தேதி தொடங்குகிறது. 
    Next Story
    ×