search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    140 ரன் குவித்த லஹிரு திரிமானே
    X
    140 ரன் குவித்த லஹிரு திரிமானே

    2வது டெஸ்டில் கருணரத்னே, திரிமானே சதம் - இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 469/6

    வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்துள்ளது.
    பல்லகெலே:

    வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கருணரத்னே, லஹிரு திரிமானே ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.
     
    அணியின் ஸ்கோர் 209 ரன்னாக உயர்ந்த போது 12-வது சதத்தை அடித்து இருந்த கருணரத்னே (118 ரன், 190 பந்து, 15 பவுண்டரி) கேட்ச் ஆனார். திரிமன்னே 212 பந்துகளில் தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 291 ரன்கள் குவித்துள்ளது.

    திரிமானே 131 ரன்னுடனும், ஒஷாடா பெர்னாண்டோ 40 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    12வது சதமடித்த திமுத் கருணரத்னே

    இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சிறப்பாக ஆடிய திரிமானே 140 ரன்னில் அவுட்டானார். அரை சதமடித்து அசத்திய ஒஷாடா பெர்னாண்டோ 81 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 5 ரன்னிலும், தனஞ்செய டி சில்வா 2 ரன்னிலும், பதும் நிசங்கா 30 ரன்னிலும்  வெளியேறினர்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் குவித்துள்ளது. டிக்வெலா 64 ரன்னுடனும்,  ரமேஷ் மெண்டிஸ் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    வங்காளதேசம் அணி சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், தஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    Next Story
    ×