என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பையுடன் மும்பை அணி வீரர்கள்
    X
    கோப்பையுடன் மும்பை அணி வீரர்கள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான் எப்சி அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), கோவா அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
     
    மும்பை அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் சமநிலை வகித்ததால் (2-2) ‘பெனால்டி ஷூட் அவுட்’டில் 6-5 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    3 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, இந்த முறை புகழ் பெற்ற மோகன் பகான் கிளப்புடன் இணைந்து ஏ.டி.கே. மோகன் பகான் என்ற பெயரில் களம் கண்டது. அந்த அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மும்பை சிட்டி, ஏ டி கே மோகன் பகான் எப்சி அணிகளுக்கு இடையே கோவாவில் இன்று இரவு நடைபெற்றது.

    கொல்கத்தா அணியின் வில்லியம்ஸ் 18வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் மும்பை அணியின் கோலை தடுக்க முயன்ற கொல்கத்தா வீரர் டிரி சேம் சைடு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-1 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மும்பை வீரர் பார்தோலெமெவ் பாஸ் செய்த பந்தை அடித்த  பிபின் சிங் கோலாக மாற்றினார். 

    இறுதியில், மும்பை அணி 2-1 என்ற கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    Next Story
    ×