search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெனிபர் பிராடி - நவோமி ஒசாகா
    X
    ஜெனிபர் பிராடி - நவோமி ஒசாகா

    ஜப்பான் வீராங்கனை ஒசாகா பட்டம் வெல்வாரா? இறுதிப் போட்டியில் பிராடியுடன் நாளை மோதல்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நாளை நடக்கவுள்ள இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவும், ஜெனிபர் பிராடியும் பலப்பரீட்ச்சை நடத்துகின்றனர்.

    மெல்போர்ன்:

    இந்த ஆண்டில் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

    இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா- ஜெனிபர் பிராடி (அமெரிக்கா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    ஒசாகா அரைஇறுதியில் 23 பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஒசாகா இதுவரை மூன்று முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ளார்.

    2019-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். அமெரிக்க ஓபன் பட்டத்தை இரண்டு முறை (2018, 2020) கைப்பற்றினார். அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2-வது முறை வெல்வாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒசாகா மூன்று முறை கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதில் அனைத்திலும் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    22-ம் நிலை வீராங்கனை ஜெனிபர் பிராடி முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு தகுதி பெற்றதே சிறந்த நிலையாக இருந்தது.

    பிராடி முதல் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். ஆனால் பலம் வாய்ந்த ஒசாகாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

    நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நம்பர் ஒன் வீரரும் நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச் ரஷியாவின் அஸ்லான் கரட்டுலுவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இன்று நடக்கும் 2-வது அரை இறுதியில் 4-ம் நிலை வீரர் மெட்வேதேவ் (ரஷியா)- 5-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுவார்கள்.

    Next Story
    ×