என் மலர்
செய்திகள்

மெஸ்சி, ரொனால்டோ
2018-க்குப்பின் முதன்முறையாக மெஸ்சியை எதிர்கொண்ட ரொனால்டோ: எதிரியாக நினைத்ததில்லை என்கிறார்
ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மெஸ்சி விளையாடும் பார்சிலோனாவை ரொனால்டோ விளையாடும் யுவென்டஸ் அணி தோற்கடித்தது.
கால்பந்தில் இந்த தலைமுறையில் மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் தலைசிறந்த வீரராக கருதப்படுகிறார்கள். இதில் மெஸ்சிக்கும், ரொனால்டோவுக்கும் இடையில்தான் கடும்போட்டி. இருவரும் ஸ்பெயின் நாட்டின் நடைபெறும் லா லிகா தொடரில் நேருக்கு நேர் சுமார் 10 ஆண்டுகளாக விளையாடினர். மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடினர்.
அப்போது இருவரும் மோதும் ஆட்டத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். ரொனால்டோ கடந்த 2018-ல் இத்தாலியின் யுவென்டஸ் அணிக்கு சென்றுவிட்டார். அதன்பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நேருக்குநேர் மோதியது கிடையாது.
இந்த நிலையில் கிளப் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் நேற்று பார்சிலோனா - யுவென்டஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இருவரும் நேருக்குநேர் சந்தித்து கொண்டனர். இந்த போட்டியில் யுவென்டஸ் 3-0 என வெற்றி பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பு மூலம் இரண்டு கோல்கள் அடித்தார். மெஸ்சி கோல் அடிக்க முடியாமல் ஏமாற்றம் அளித்தார்.

இந்த நிலையில் மெஸ்சி எனக்கு ஒருபோதும் எதிரி கிடையாது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறிகையில் ‘‘நான் எப்போதும் மெஸ்சியுடன் ஒரு நல்லுறவை கொண்டிருந்தேன். அவரை நான் ஒருபோதும் எதிரியாக நினைத்ததில்லை.
அவர் எப்போதுமே அவருடைய அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார். நானும் அதேபோல் என்னுடைய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முயற்சிப்பேன். அவருடன் நல்லதையே பெற்றுள்ளேன். அவரிடம் கேட்டாலும் இதைத்தான் சொல்வார் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும். 12, 13 வருடமாக பரிசுகளை அவருடன் பகிர்ந்துள்ளேன்’’ என்றார்.
கால்பந்தின் உயரிய விருதான பலோன் டி'ஆர்-யை கடந்த 12 வருடத்தில் இருவரும் 11 முறை வென்றுள்ளனர்.
Next Story






