search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
    X
    வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

    32 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெல்லுமா?- நாளை முதல் டெஸ்ட் தொடக்கம்

    இங்கிலாந்தில் மண்ணில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வெல்லும் உத்வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை களம் இறங்குகிறது.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் மார்ச் 13-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. அதன்பின் முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் டெஸ்டில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ரசிகர்கள் இன்றி, உயிர் பாதுகாப்பு சூழ்நிலையில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை உலகமே உற்று நோக்க இருக்கிறது.

    பலம்பொருந்திய அணியாக திகழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 1995-ம் ஆண்டுக்குப்பின் பலவீனம் ஆனது. அதன்பிறகு அணியை எப்படி கட்டமைக்க முயற்சி செய்தாலும் முந்தைய காலம் போன்று ஜொலிக்க முடியவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக இங்கிலாந்தில் மண்ணில் 1988-ம் ஆண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது. அதன்பின் 32 ஆண்டுகளாக தொடரை கைப்பற்றவில்லை.

    2017-ல் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது 1-2 எனத் தோல்வியடைந்தது. ஆனால் கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் யாரும் எதிர்பார்க்க வகையில் 2-1 என வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. இந்த நம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்க இருக்கிறது.

    இந்த தொடரை வெல்ல ஜாம்பவான் பிரையன் லாரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்தத் தொடர் குறித்து லாரா கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் அணி மிக விரைவாக நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. எப்போதுமே அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

    போட்டியை ஐந்து நாட்கள் வரை கொண்டு செல்வார்கள் என்று நினைக்கவில்லை. ஆகவே, நான்கு நாட்களில் முடிக்க விரும்புவார்கள். அவர்கள் முன்னிலைப் பெற்று அதை தக்கவைத்துக் கொள்வார்கள்.

    இந்தத் தொடரை உலகமே பார்க்க ஆவலாக உள்ளது. இது போட்டித் தொடராக இருக்கும் என்று ஒவ்வொருவரும் நம்புகிறோம்.

    இந்தத் தொடரை வென்றால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏராளமான அர்த்தத்தை ஏற்படுத்தும். தொடரின் முதல் நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாட முடியும் என்று காண்பித்தால், அது முக்கிய விஷயமாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×