search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்முலா 1 கார்பந்தயம் - கோப்புப்படம்
    X
    பார்முலா 1 கார்பந்தயம் - கோப்புப்படம்

    பார்முலா 1 கார்பந்தயம் இன்று தொடக்கம் - முதல் போட்டி ஆஸ்திரியாவில் நடக்கிறது

    கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா 1 கார்பந்தயம் ஆஸ்திரியா நாட்டில் இன்று தொடங்குகிறது.
    ஸ்பில்பேர்க்:

    கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா1 கார்பந்தயம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கடந்த மார்ச் 15-ந்தேதி மெல்போர்னில் ஆஸ்திரேலியா கிராண்ட்பிரியின் மூலம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஆஸ்திரேலியா கிராண்ட்பிரி ரத்து செய்யப்பட்டது. மேலும் பல பந்தயங்கள் தள்ளிவைக்கப்பட்டன.

    இதையடுத்து இந்த சீசனுக்கான பந்தயங்களை முழுமையாக நடத்த இயலாது என்பதை உணர்ந்துள்ள போட்டி அமைப்பாளர்கள் 15 முதல் 18 சுற்றுகளை நடத்த முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக 8 சுற்று பந்தயத்தின் போட்டி அட்டவணை உறுதி செய்யப்பட்டது.

    இதன்படி இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் ஆஸ்திரியா நாட்டில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது. ஆஸ்திரியா கிராண்ட்பிரி என்ற பெயரில் அங்குள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் நடக்கும் இந்த போட்டியில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்கிறார்கள். பந்தய தூரம் 306.452 கிலோமீட்டர் ஆகும்.

    கொரோனா பீதியால் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. குறைந்த எண்ணிக்கையிலான ஊடகத்தினர் மற்றும் அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பாதுகாப்பு குழுவினர் கொரோனா மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். பரிசளிப்பு நிகழ்ச்சி கிடையாது.

    வீரர்கள், அவர்களின் குழுவினர், நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவுகள் வந்திருக்கிறது. இந்த போட்டியையொட்டி ஜூன் 26-ந்தேதியில் இருந்து ஜூலை 2-ந்தேதி வரை மட்டும் மொத்தம் 4,032 தடவை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் பார்முலா1 நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மெர்சிடஸ் அணிக்காக கார் ஓட்டும் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் ஏற்கனவே 6 முறை மகுடம் சூடியிருக்கிறார். இந்த சீசனிலும் பட்டம் வென்றால் அதிகமுறை பார்முலா1 பட்டத்தை கைப்பற்றிய ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்து விடுவார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இனவெறிக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் அவர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருப்பு நிற ஹெல்மெட்டை அணிந்து களம் இறங்குகிறார். அவருக்கு வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து), சார்லஸ் லெக்லெர்க் (மொனாக்கோ), மேக்ஸ் வெர்ஸ்டப்பன் (நெதர்லாந்து), செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று நடந்த தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்த வால்டெரி போட்டாசின் கார் முதல் வரிசையில் இருந்தும், ஹாமில்டனின் கார் 2-வது வரிசையில் இருந்தும் புறப்படும்.

    ஒவ்வொரு பந்தயத்திலும் முதல் 10 இடங்களுக்குள் வருவோருக்கு புள்ளிகள் வழங்கப்படும். டாப்-3 இடங்களை பிடிப்போருக்கு 25, 18, 15 வீதம் புள்ளி கிடைக்கும். அனைத்து சுற்றுகளின் முடிவில் யார் அதிக புள்ளிகள் எடுக்கிறார்களோ அவர்கள் பார்முலா1 சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்வார்கள்.
    Next Story
    ×