search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பில் சிம்மன்ஸ்
    X
    பில் சிம்மன்ஸ்

    இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு சிக்கலில் மாட்டிக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர்

    இங்கிலாந்தில் மாமனார் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதால், உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளரை நீக்க வேண்டும் என பார்படோஸ் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உயிர் பாதுகாப்பு வளையம் (bio-secure location)என்ற அடிப்படையில் வீரர்களை ஒருங்கிணைத்து மிகவும் பாதுகாப்பாக நடத்தப்பட இருக்கிறது.

    இதற்காகவே ஒரு மாதத்திற்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்றது. புறப்படும் முன் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர்தான் வீரர்கள் புறப்பட  அனுமதித்தனர்.

    இங்கிலாந்துக்கு சென்றதும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன்பின் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து வீரர்களுக்கும் இது நடைமுறைதான். வீட்டில் இருந்து 14 நாட்களுக்கு முன்னர் முகாமிற்கு வந்துவிட வேண்டும். இரண்டுமுறை பரிசோதனை செய்யப்படும். அதன்பிறகு பயிற்சிக்கு அனுமதிக்கபடுவார்கள்.

    8-ந்தேதி முதல் டெஸ்ட் தொடங்கும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் இங்கிலாந்தில் அவரது மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளார். இது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக பார்படோஸ் கிரிக்கெட் சங்கம் அவரை உடினடியாக நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளது. தற்போது பில் சிம்மன்ஸ் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள 14 வீரர்களில் 9 பேர் பார்படோசை சேர்ந்தவர்கள். 14 இளம் வீரர்களின் உயிர் முக்கியம் என்று அந்த சங்கத்தின் தலைவரும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டின் தலைவருமான கோன்டே ரிலே கவலை தெரிவித்துள்ளார். மேலும், பில் சிம்மன்ஸ் செயல் சிந்தனையற்ற மற்றும் பொறுப்பற்றது எனவும் சாடியுள்ளார்.

    இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரும்பிய உடன் சிம்மன் அணி வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுவரை இரண்டு முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இரண்டு முறையில் நெகட்டிவ் வந்துள்ளது. இன்னொரு  டெஸ்ட் செய்த பிறகு அணு வீரர்களுடன் இணைய அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×