search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் தேவை: கவாஸ்கர் சொல்கிறார்
    X

    உலக கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் தேவை: கவாஸ்கர் சொல்கிறார்

    உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேவை என்று முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #WorldCup2019
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் 24-ந்தேதியும், ஒரு நாள் தொடர் மார்ச் 2-ந்தேதியும் தொடங்குகிறது.

    உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் என்பதால் ஆஸ்திரேலிய தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டியில் இடம்பெற்ற அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் நிலையாக விளையாடி வரும் அவர் நீக்கப்பட்டது அதிர்ச்சியான ஒன்றே.

    ஆஸ்திரேலிய தொடரில் நீக்கப்பட்டதால் அவர் உலகக் கோப்பை அணியிலும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    இந்த நிலையில் உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் தேவை என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல், ரகானே, ரி‌ஷப் பந்த் என யாரையும் களம் இறக்க தேவையில்லை. தினேஷ் கார்த்திக்கை களம் இறக்கலாம். இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து எனக்கு ஒரு கண்ணோட்டம் இருக்கிறது.

    என்னுடைய கணிப்பில் 13 வீரர்களுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். அதில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, அம்பதி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், பும்ரா, முகமது‌ ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு உண்டு.

    மற்ற வகையில் ராகுல், ரகானே, ரி‌ஷப் பந்ட் ஆகியோரை காட்டிலும் உலகக் கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் தேவை. அணியில் எப்போதும் நெகிழ்வு தன்மை இருக்க வேண்டும். தொடக்க வீரராக தினேஷ் கார்த்திக்கை மாற்றி களம் இறக்கும்போது நல்ல முடிவு கிடைக்கும். டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய அனுபவம் இருப்பதால் அவரால் ஒரு நாள் போட்டியில் ஜொலிக்க முடியும்.

    14-வது வீரராக விஜய் சங்கர் இருக்கலாம். ஏனென்றால் இங்கிலாந்து மைதானத்தில் பந்து நன்றாக ‘சுவிங்’ ஆகும். அப்போது ஹர்த்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய இரண்டு ஆல் ரவுண்டர்களுடன் களம் இறங்கலாம்.

    கலீல் அகமது, முகமது சிராஜ் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீசவில்லை. உமேஷ் யாதவை மாற்று வீரராக மட்டுமே வைத்து இருக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் வெல்லும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    தினேஷ் கார்த்திக் நிலை குறித்து முன்னாள் வீரரும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியதாவது:-

    இந்திய அணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கை 20 ஓவர் வீரராக மட்டுமே பார்க்க தொடங்கி விட்டது என்பது புரிந்துவிட்டது. அவருக்கு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைப்பதும், வாய்ப்புக்கான கதவுகள் திறப்பதும் என்னை பொறுத்தவரை இல்லை. அதற்காக அவரின் ரசிகர்களிடம் வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

    நியூசிலாந்தில் அம்பதி ராயுடு பொறுமையாக, நிதானமாக ஆடிய விதம் கார்த்திக்கை விட சிறப்பாக இருந்தது என்று நிர்வாகம் கருதலாம். நீண்ட நேரம் விளையாடும் போட்டியில் தினேஷ் கார்த்திக் நிலைத்து ஆடும் பொறுமையில்லை என்று கருதுகிறார்கள்.

    டோனி, ரிசப் பந்த் ஆகியோருடன் ஒப்பிடுகையில் தினேஷ் கார்த்திக், டோனியை காட்டிலும் கீப்பிங்கில் சற்று குறைவாகவும், ரி‌ஷப் பந்த்-ஐ காட்டிலும் சற்று சிறப்பாகவும் செயல்படுகிறார்.

    ஆனால் ரி‌ஷப் பந்த் சமீப காலமாக பேட்டிங் செய்யும் விதம் தேர்வாளர்களை கவர்ந்துள்ளது. நம்பிக்கை அளித்துள்ளது. நான் ரி‌ஷப் பந்த் ஆதரவாளர் இல்லை. ஆனால் அவர் ஒரு நாள் போட்டியில் தனக்கான இடத்தை தக்க வைக்க முயன்று வருகிறார்.

    பல போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தினேஷ் கார்த்திக் சரியாக பயன்படுத்தியும் தேர்வு செய்யவில்லை எனும்போது அவரது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே கருதுகிறேன். 20 ஓவர் வீரராக மட்டுமே அவர் தொடர முடியும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ரேக்கர் கூறினார்.
    Next Story
    ×