search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கிரிக்கெட்- சவுராஷ்டிராவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது விதர்பா
    X

    ரஞ்சி கிரிக்கெட்- சவுராஷ்டிராவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது விதர்பா

    ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய விதர்பா அணி, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. #RanjiTrophyFinal #VIDvSAU
    நாக்பூர்:

    ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியன் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே விதர்பா அணி 312 ரன்னும், சவுராஷ்டிரா அணி 307 ரன்னும் எடுத்தன. 5 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. கணேஷ் சதீஷ் 24 ரன்னும், வாசிம் ஜாபர் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய விதர்பா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. வாசிம் ஜாபர் 11 ரன்னிலும், கணேஷ் சதீஷ் 35 ரன்னிலும், அக்‌ஷய் வாத்கர் ரன் எதுவும் எடுக்காமலும், அக்‌ஷய் கார்னிவார் 18 ரன்னிலும், மொகித் காலே 38 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

    நிலைத்து நின்று ஆடிய ஆதித்யா சர்வாதே 133 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். விதர்பா அணி 92.5 ஓவர்களில் 200 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. சவுராஷ்டிரா அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தர்மேந்திரசிங் ஜடேஜா 6 விக்கெட்டும், கம்லேஷ் மக்வானா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 206 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி துவக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்னெல் பட்டேல் 12 ரன்னிலும், ஹர்விக் தேசாய் 8 ரன்னிலும், மற்றும் நட்சத்திர வீரர் புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும், அர்பித் வசவதா 5 ரன்னிலும், ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

    இதனால் நேற்றைய ஆட்டநேர முடிவில் சவுராஷ்டிரா அணி 2-வது இன்னிங்சில் 28 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. விஸ்வராஜ் ஜடேஜா 23 ரன்னுடனும், கம்லேஷ் மக்வானா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். விதர்பா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதித்யா சர்வாதே 3 விக்கெட்டும், அக்‌ஷய் வாக்கரே ஒரு விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபட்டதால் விதர்பா அணி வெற்றியை நோக்கி பயணித்தது.

    இந்நிலையில், இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சவுராஷ்டிரா அணியின் வெற்றிக்கு மேலும் 148 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நிதானமாக விளையாடியது. மக்வானா 14 ரன்கள் எடுத்த நிலையில் சர்வாதேவிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மன்கட் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரை வாக்கரே பெவிலியனுக்கு அனுப்பினார். அப்போது அணியின் வெற்றிக்கு 115 ரன்கள் தேவைப்பட்டது.

    நெருக்கடிக்கு மத்தியிலும் விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய ஜடேஜா, அரை சதம் கடந்தார். ஆனால், அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டிஏ ஜடேஜா 17 ரன்னிலும், உனாத்கட் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, சவுராஷ்டிரா அணி 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.

    இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஆதித்யா சர்வாதே, 2ம் இன்னிங்சில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முதல் இன்னிங்சில் 98 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. #RanjiTrophyFinal #VIDvSAU
    Next Story
    ×