search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்
    X

    8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

    முன்னணி 8 வீராங்கனைகள் கலந்து கொள்ளும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்குகிறது. #WTAFinal2018 #Wozniacki #Kvitova #Osaka
    சிங்கப்பூர்:

    ஆண்டின் இறுதியில், தரவரிசையில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு நிகராக கருதப்படுவதால் இந்த போட்டி மீது எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படும்.

    இதன்படி 48-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் 28-ந்தேதிவரை சிங்கப்பூரில் நடக்கிறது. முதல் வீராங்கனையாக இந்த போட்டிக்கு தகுதி பெற்றிருந்த ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா) காயம் காரணமாக விலகி விட்டார். அவருக்கு பதிலாக வளரும் நட்சத்திர வீராங்கனை நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் சேர்க்கப்பட்டார். 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனை நாயகி செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) இந்த முறை தகுதி பெறவில்லை.



    இதில் களம் காணும் வீராங்கனைகள் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ‘ரெட்’ பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), நவோமி ஒசாகா (ஜப்பான்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) ஆகியோரும், ‘ஒயிட்’ பிரிவில் நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), பெட்ரா கிவிடோவா, கரோலினா பிளிஸ்கோவா (இருவரும் செக்குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.51 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.13½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். இறுதி சுற்றில் தோல்வி அடையும் வீராங்கனைக்கு ரூ.5 கோடி கிடைக்கும். இது தவிர லீக்கில் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.1 கோடியே 12 லட்சம் வீதம் வழங்கப்படும். அத்துடன் போட்டியில் பங்கேற்பதற்கு கட்டணமாக ரூ.1.10 கோடி தனியாக கொடுக்கப்படும்.

    சமீபத்தில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி அமெரிக்க ஓபனை கைப்பற்றி வரலாறு படைத்த ஜப்பானின் ஒசாகா இங்கு பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒசாகா கூறுகையில், ‘எங்களது பிரிவில் உள்ள அனைவரும் சிறந்த வீராங்கனைகள். அவர்களுக்கு எதிராக மோதுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்றார்.

    தொடக்க நாளில் கிவிடோவா-ஸ்விடோலினா (இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி) வோஸ்னியாக்கி-பிளிஸ்கோவா (மாலை 5 மணி) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். 
    Next Story
    ×