search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மொயீன் அலி
    X
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மொயீன் அலி

    டி20 பிளாஸ்ட்- சசக்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது வொர்செஸ்டர்ஷைர்

    இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் தொடரில் சசக்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வொர்செஸ்டர்ஷைர் சாம்பியன் பட்டம் வென்றது. #T20Blast
    இங்கிலாந்தில் உள்ள முன்னணி கவுன்ட்டி அணிகளுக்கு இடையிலான டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சசக்ஸ் - வொர்செஸ்டர்ஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சசக்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் 3-வது வீரர் லயுரி எவன்ஸ் 44 பந்தில் 52 ரன்களும், லூக் ரைட் 25 பந்தில் 33 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. வொர்செஸ்டர்ஷைர் அணி சார்பில் கேப்டன் மொயீன் அலி 4 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


    46 ரன்கள் அடித்த வொர்செஸ்டர்ஷைர் அணியின் பென் கோக்ஸ்

    பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வொர்செஸ்டர்ஷைர் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஜோ கிளார்க் (33), மொயீன் அலி (41) சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்தனர்.

    அதன்பின் வந்த இரு வீரர்கள் சொதப்பினாலும், விக்கெட் கீப்பர் பென் கோக்ஸ் ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 46 ரன்கள் சேர்க்க வொர்செஸ்டர்ஷைர் அணி 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    Next Story
    ×