search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ்-காஞ்சி வீரன்ஸ் இன்று பலப்பரீட்சை
    X

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ்-காஞ்சி வீரன்ஸ் இன்று பலப்பரீட்சை

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியும் காஞ்சி வீரன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    திண்டுக்கல்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 14 ஆட்டங்கள் முடிந்து விட்டன. அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. காரைக்குடி காளை, டூட்டி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. காஞ்சி வீரன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகியவை புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

    டி.என்.பி.எல். போட்டியின் 15-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கலை அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் மதுரை பாந்தர்ஸ்- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மதுரை அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதை தொடர்ந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (26 ரன்), டூட்டி பேட்ரியாட்ஸ் (7 விக்கெட்) அணிகளை வீழ்த்தியது.

    பலவீனமாக காணப்படும் காஞ்சி வீரன்சை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்தில் மதுரை அணி இருக்கிறது.

    பாபா அபராஜித் தலைமையிலான வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.

    அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்சிடமும், 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சிடமும், 7 விக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சிடமும் தோற்றது.

    தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் காஞ்சி வீரன்ஸ் இருக்கிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    Next Story
    ×