search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல். போட்டி நாளை தொடக்கம்: திண்டுக்கல் டிராகன்ஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் மோதல்
    X

    டி.என்.பி.எல். போட்டி நாளை தொடக்கம்: திண்டுக்கல் டிராகன்ஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் மோதல்

    3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நெல்லையில் நாளை தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. #NammaOoruNammaGethu #TNPL2018
    நெல்லை:

    டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் டூட்டி பேட்டிரியாட்ஸ் (தூத்துக்குடி) அணி அறிமுக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. கடந்த ஆண்டு நடந்த 2-வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

    3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நெல்லையில் நாளை (11-ந் தேதி) தொடங்குகிறது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

    நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் ஆகிய 3 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.

    நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், வி.பி.காஞ்சி வீரன்ஸ், லைகா கோவை கிங்ஸ், சீசெம்மதுரை பாந்தர்ஸ், ஐடிரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை இந்த முறை புதிய உரிமையாளர்கள் வாங்கி இருப்பதால் அதன் பெயர்களை மாற்றி உள்ளனர். அதன்படி ஐடிரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் பெயர் வி.பி.காஞ்சி வீரன்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    மொத்தம் 32 போட்டிகள் நடக்கிறது. நெல்லை, திண்டுக்கல்லில் (நத்தம்) தலா 14 ஆட்டங்களும், சென்னையில் 4 போட்டிகளும் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரண்டு போட்டிகளும் (மாலை 3.15, இரவு 7.15) மற்ற தினங்களில் ஒரே ஒரு ஆட்டமும் (இரவு 7.15) நடைபெறும்.

    ஆகஸ்டு 5-ந் தேதி வரை ‘லீக்’ ஆட்டம் நடைபெறும். 7-ந் தேதி ‘பிளே ஆப்’ சுற்று தொடங்குகிறது. ‘தகுதி சுற்று1’ ஆட்டம் (குவாலிபையர்1) நெல்லையிலும், வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) மற்றும் தகுதி சுற்று-2 (குவாலி பையர் 2) ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும் நடக்கிறது. இறுதிப்போட்டி ஆகஸ்டு 12-ந் தேதி சென்னையில் நடக்கிறது.

    முதல் 2 சீசனிலும் ஒவ்வொரு அணியிலும் விளையாடிய வீரர்கள் இந்த சீசனில் வேறு அணிக்காக ஆடுகிறார்கள். 3-வது டி.என்.பி.எல். சீசனுக்கான வீரர்கள் புதிதாக ஏலம் விடப்பட்டனர். இதனால் முதல் 2 போட்டியை விட இந்த சீசன் போட்டி அதை விட விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வீரரும் தங்களதுதிறமையை வெளிப்படுத்த கடுமையாக போராடுவார்கள்.

    3-வது டி.என்.பி.எல். போட்டியில் முதல் முறையாக வெளி மாநில வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் 2 வீரர்கள் என மொத்தம் 16 வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நாளை (புதன் கிழமை) இரவு 7.15 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.



    முன்னதாக தொடக்க விழா கோலாகலமாக நடக்கிறது. 8 அணிகளின் கேப்டன்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்சை எதிர் கொள்கிறது. அந்த ஆட்டம் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) சென்னையில் நடக்கிறது.

    டி.என்.பி.எல். போட்டிகள் அனைத்தும் ஸ்டோர் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1’ சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #NammaOoruNammaGethu #TNPL2018
    Next Story
    ×