என் மலர்
செய்திகள்

நடுவரின் இருக்கையில் நாணயம் வீசிய விவகாரம்: தண்டனைக்குள்ளாவாரா மெத்வதேவ்?
விம்பிள்டன் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்த மெத்வதேவ் நடுவரின் இருக்கையில் நாணயத்தை வீசியதற்காக தண்டனைக்கு உள்ளாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
லண்டன்:
ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான மெத்வதேவ் சமிபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரின் முதல் சுற்றில் அவர் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார். இப்போட்டியில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மெத்வதேவ் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பெல்ஜியத்தின் ரூபன் பெமல்மென்சை எதிர்கொண்டார். இப்போட்டியில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார். முந்தைய சுற்றில் முண்ணனி வீரரை வீழ்த்திவிட்டு இந்த சுற்றில் தன்னைவிட தரவரிசையில் பிந்தி உள்ள வீரரிடம் தோல்வி அடைந்ததால் அவர் மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்.
அப்போது நடுவரின் இருக்கையில் நாணயத்தை வீசியுள்ளார். இந்த செய்கைக்காக அவர் பலத்த விமர்சனங்களுக்கு ஆளானார். அவரது இந்த செய்கைக்காக அவருக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக டென்னிஸ் ராக்கெட்டை உடைத்ததற்காக பிரிட்டனின் ஹித்தர் வாட்சன் கடுமையான தண்டனைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்த மெத்வதேவ் “தோல்வியின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் என்ன செய்கிறேன் என்பதை உணராமல் தவறு செய்துவிட்டேன். அந்த நடுவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து மன்னிப்பு கேட்க உள்ளேன்” என்றார்.
Next Story






