search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கோப்பையை வெல்வது யார்? மும்பை- புனே இன்று பலப்பரீட்சை
    X

    ஐ.பி.எல். கோப்பையை வெல்வது யார்? மும்பை- புனே இன்று பலப்பரீட்சை

    ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. இதில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    10-வது ஐ.பி.எல். கிரிக் கெட் போட்டி கடந்த ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்தது.

    மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.

    இதன் முடிவில் மும்பை (10 வெற்றி) 20 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

    2-வது இடத்தை புனே (18 புள்ளி), 3-வது இடத்தை ஐதராபாத் (17 புள்ளி), 4-வது இடத்தை கொல்கத்தா (16 புள்ளி) ஆகிய அணிகள் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின.



    முதல் 2 இடங்களை பிடித்த மும்பை - புனே அணிகள் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் மோதின. இதில் புனே 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    வெளியேறுதல் சுற்று ஆட்டத்தில் 3-வது இடத்தை பிடித்த ஐதராபாத், 4-வது இடத்தை பிடித்த கொல்கத்தா அணிகள் மோதின. இதில் கொல்கத்தா 7 விக்கெட்டில் வென்றது.

    இதையடுத்து நடந்த 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    2 முறை சாம்பியனான (2013, 2015) மும்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இது 4-வது முறையாகும்.

    ஐ.பி.எல. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    முன்னாள் சாம்பியனான மும்பை 3-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    தனது முதல் ஆட்டத்தில் தோற்ற (புனேவுக்கு எதிராக) அந்த அணி அதன்பின் வெற்றியை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ஆனால் லீக் ஆட்டத்தில் புனேவிடம் 2 முறையும், முதல் தகுதி சுற்றிலும் மும்பை தோற்றது.

    இதற்கு தக்க பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

    அந்த அணியில் பார்த்தீவ் பட்டேல், சிம்மனஸ், ரோகித் சர்மா, குணால் பாண்ட்யா, ஹர்த்திக் பாண்ட்யா, மிட்செல் ஜான்சன், கரண் சர்மா, பும்ப்ரா, மலிங்கா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.



    கடந்த ஆண்டு அறிமுகமான புனே அணி அத்தொடரில் 7-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து டோனி கழற்றி விடப்பட்டு ஸ்டீவன் சுமித் நியமிக்கப்பட்டார்.

    அந்த அணி இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியை எட்டி இருக்கிறது.

    இத்தொடரில் மும்பையுடன் மோதிய 3 ஆட்டத்திலும் புனேயே வெற்றிவாகை சூடி இருக்கிறது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    பேட்டிங்கில் ஸ்டீவன் சுமித், ராகுல் திரிபாதி, ரகானே, மனோஜ் திவாரி, டோனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டிக்கு சென்று விட்டதால் புனேக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும் அதை சமாளித்து விளையாடுகிறார்கள். டோனியின் அனுபவம் ஆலோசனை புனே அணிக்கு உதவிகரமாக இருக்கிறது.

    தகுதி சுற்றில் அவர் மும்பைக்கு எதிராக அதிரடியாக விளையாடியதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. பந்து வீச்சில் ஜெய்தேவ் உனத்கட், வாஷிங்டன் சுந்தர், தாகூர், டேனியல் கிறிஸ்டியன், ஆடம் ஜம்பா ஆகியோர் உள்ளனர்.

    புனே முதல் ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×