search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி டெஸ்ட்: ஸ்மித், மேக்ஸ்வெல் ஆட்டத்தால் ஆஸி. முதல் நாளில் 299/4
    X

    ராஞ்சி டெஸ்ட்: ஸ்மித், மேக்ஸ்வெல் ஆட்டத்தால் ஆஸி. முதல் நாளில் 299/4

    ராஞ்சியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஸ்மித், மேக்ஸ்வெல் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் சேர்த்துள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரென்ஷா, வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    சரியாக 50 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் ஸ்மித் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய ரென்ஷா 44 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஷேன் மார்ஷை (2) வந்த வேகத்திலேயே அஸ்வின் வெளியேற்றினார். இதனால் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.

    ஸ்மித் 34 ரன்னுடனும் ஹேண்ட்ஸ்காம்ப் 6 ரன்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஹேண்ட்ஸ்காம்ப் 19 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

    5-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். ஸ்மித் சிறப்பாக விளையாடி 104 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    முதல் நாள் தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 80 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.



    மேக்ஸ்வெல் முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ஸ்மித் இந்த தொடரில் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைக்காத ஆடுகளத்தில் இருவரும் சிரமமின்றி ரன்கள் சேர்த்தனர். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்துள்ளது.

    ஸ்மித் 117 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 82 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
    Next Story
    ×