என் மலர்

  செய்திகள்

  இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: வாவ்ரிங்கா, கெர்பர் வெற்றி
  X

  இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: வாவ்ரிங்கா, கெர்பர் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
  இண்டியன்வெல்ஸ்:

  இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

  முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.

  இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 7-5, 6-3 என்ற நேர்செட்டில் 31-ம் நிலை வீரர் பிலிப் கோஹிஸ்ஷிரிபெரை (ஜெர்மனி) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 78 நிமிடம் தேவைப்பட்டது.

  மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 7-6 (7-3), 6-4 என்ற நேர்செட்டில் 24-வது இடத்தில் இருக்கும் சக நாட்டு வீரர் ஆல்பர்ட் ரமோஸ்சை சாய்த்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 1 மணி 38 நிமிடம் நீடித்தது. இன்னொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 9-வது இடத்தில் உள்ள டொமினிச் திம் (ஆஸ்திரியா) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் மிஸ்சா ஸ்வேராவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

  மற்றொரு ஆட்டத்தில் 11-ம் நிலை வீரரான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மான்பில்ஸ் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சாய்த்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு) 6-1, 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். ஸ்பெயின் வீரர் ராபர்ட்டா பாவ்டிஸ்டா அகுத் கடைசி நேரத்தில் காயத்தால் விலகியதால் சக நாட்டு வீரர் பாப்லோ காரேனோ பஸ்டா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

  மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் உருகுவே வீரர் பாப்லோ குவாஸ் 6-1, 6-4 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் பாபியோ போக்னினியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரேவுக்கு (இங்கிலாந்து) அதிர்ச்சி அளித்தவரும், உலக தர வரிசையில் 129-வது இடத்தில் இருப்பவருமான கனடாவின் வாசெக் போஸ்பிசில் 7-6 (7-4), 3-6, 5-7 என்ற செட் கணக்கில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தகுதி சுற்று வீரர் டுசன் லாஜோவிச்சிடம்(செர்பியா) வீழ்ந்து நடையை கட்டினார்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 7-5, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை பாலினே பார்மென்டியரை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 6-வது இடத்தில் உள்ள அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 4-6, 4-6 என்ற நேர்செட்டில் 49-வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை ஷூய் பெங்கிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.

  இன்னொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-2 என்ற நேர்செட்டில்40-வது இடத்தில் உள்ள லூசி சபரோவாவை (செக் குடியரசு) தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் எலினா வெஸ்னினா (ரஷியா), கிறிஸ்டினா மாடினோவிச் (பிரான்ஸ்), லாரென் டாவிஸ் (அமெரிக்கா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

  4-வது சுற்று ஆட்டங்களில் ஏஞ்சலிக் கெர்பர், எலினா வெஸ்னினாவை சந்திக்கிறார். வீனஸ் வில்லியம்ஸ், ஷூய் பெங்கை எதிர்கொள்கிறார். கரோலின் வோஸ்னியாக்கி-மேடிசன் கீஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். 
  Next Story
  ×