search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதம் அடித்த காமினி மற்றும் காமினியும், தீப்தி ஷர்மாவும் ரன் எடுக்க ஓடும் காட்சி.
    X
    சதம் அடித்த காமினி மற்றும் காமினியும், தீப்தி ஷர்மாவும் ரன் எடுக்க ஓடும் காட்சி.

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: இந்திய அணிக்கு 3-வது வெற்றி

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை துவம்சம் செய்து 3-வது வெற்றியை ருசித்தது.
    கொழும்பு :

    11-வது பெண்கள் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 4 அணிகள் நேரடியாக இந்த போட்டிக்கு தகுதி பெற்று விட்டன.

    எஞ்சிய 4 அணிகள் எவை? என்பதை நிர்ணயிக்கும் பெண்கள் உலக கோப்பை தகுதி சுற்று கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக போட்டிக்கு தகுதி பெறும்.

    தகுதி சுற்றில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா-அயர்லாந்து (ஏ பிரிவு) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த 26 வயதான திருஷ்காமினி ஆட்டம் இழக்காமல் 113 ரன்னும் (146 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்), தீப்தி ஷர்மா 89 ரன்னும் (128 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணி 49.1 ஓவர்களில் 125 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பூனம் யாதவ் 3 விக்கெட்டும், ஷிகா பாண்டே, எக்தா பிஸ்ட், தேவிகா வைத்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்திய அணி தொடர்ந்து பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே இலங்கை, தாய்லாந்தை வீழ்த்தி இருந்தது. நாளை மறுநாள் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை தோற்கடித்தது.

    ‘பி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணி 236 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியா அணியை ஊதி தள்ளி 2-வது வெற்றியை தனதாக்கியது. இதே பிரிவில் நடந்த இன்னொரு லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை தோற்கடித்து 2-வது வெற்றியை சொந்தமாக்கியது.
    Next Story
    ×