search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய போது எடுத்த படம்.
    X
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய போது எடுத்த படம்.

    கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களாக உருவாக கடின முயற்சி தேவை: ஹேமங் பதானி அறிவுரை

    டெண்டுல்கர், விராட்கோலி, டோனி போல கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களாக உருவாக கடின முயற்சி தேவை என்று இளம் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங்பதானி அறிவுரை கூறினார்.
    தஞ்சாவூர் :

    14-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள கிட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் லட்சுமிவிலாஸ் வங்கி இணைந்து நடத்துகிறது. இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 12 பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பயிற்சி நுணுக்கங்களை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங்பதானி வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், இளம்வீரர்களாகிய உங்களுக்கு கடின முயற்சி வேண்டும். அப்போது தான் சிறந்த வீரர்களாக உருவாக முடியும். நீங்கள் தான் முன்னுக்கு வர வேண்டும். இளம்வீரர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உள்ளது. அதை எப்படி உயரத்துக்கு கொண்டு செல்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

    நீங்கள் திறமையாக செயல்பட்டால் தான் தமிழ்நாடு பிரிமீயர் லீக், ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போட்டி போன்றவற்றில் இடம்பிடித்து இந்திய அணியிலும் இடம்பிடிக்க முடியும். பெற்றோர்கள் சொல்வதை கேட்க வேண்டும். பயிற்சியாளர்கள் சொல்வதை கேட்டு செயல்பட்டால் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும். மற்ற வீரர்கள் விளையாடுவதை நீங்கள் பார்ப்பதை விட, நீங்கள் விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் காளிதாஸ்வாண்டையார், லட்சுமிவிலாஸ் வங்கி மேலாளர் முத்துக்கண்ணன் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் ஹேமங்பதானி நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் தஞ்சை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட 8 இடங்களில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் திறமையான வீரர்கள் கண்டறியப்படுவார்கள். ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும் போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சென்னையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளும். இளம்வீரர்களுக்கு பயிற்சி அளித்தால் எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த வீரர்களாக முடியும். எனவே அதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்கிக்கொடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மாநில அளவில் சிறப்பான பயிற்சிகள் அளிக்கவும் திட்டம் உள்ளது”என்றார்.

    Next Story
    ×