search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரப்பு கிரிக்கெட்டில் ஒரு ரன்னில் முடிவு: இலங்கையிடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்
    X

    முத்தரப்பு கிரிக்கெட்டில் ஒரு ரன்னில் முடிவு: இலங்கையிடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்

    முத்தரப்பு கிரிக்கெட்டில் புலவாயோ நகரில் நடந்த ஆட்டத்தில் இலங்கை அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
    புலவாயோ :

    இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே இடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில், புலவாயோ நகரில் நேற்று நடந்த 5-வது லீக்கில் இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சந்தித்தன. 

    முதலில் பேட் செய்த இலங்கை அணி தனஞ்ஜெய டி சில்வா (58 ரன்), விக்கெட் கீப்பர் டிக்வெலா (94 ரன்), குசல் மென்டிஸ் (94 ரன், 7 பவுண்டரி, 5 சிக்சர்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 7 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் எவின் லிவிஸ் (148 ரன், 122 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்) தனது முதலாவது சதத்தை நொறுக்கியதோடு, அணி இலக்கு நோக்கி பயணிக்க வித்திட்டார். கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் வீசினார். முதல் 3 பந்துகளில் சிக்சர் உள்பட 7 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எடுத்தனர்.

    இதனால் 3 பந்தில் 3 ரன் மட்டுமே தேவைப்பட்டது. 4-வது பந்தில் ரன் இல்லை. 5-வது பந்தில் சுலைமான் பென் (11 ரன்) கேட்ச் ஆனார். இதையடுத்து கடைசி பந்தில் 3 ரன் தேவையாக இருந்தது. யார்க்கராக போடப்பட்ட கடைசி பந்தை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டரால் (45 ரன்) அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

    இதன் மூலம் இலங்கை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்தது. 2-வது வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் கடைசி லீக்கில் வெஸ்ட் இண்டீஸ்-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×