search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி முதல் அணியாக அரைஇறுதியை எட்டியது.
    மும்பை:

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி முதல் அணியாக அரைஇறுதியை எட்டியது.

    3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் மும்பையில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி மும்பை சிட்டியை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த மும்பை சிட்டி அணி ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. பந்தை துல்லியமாக கடத்துவதிலும், கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் மும்பையின் கையே சற்று ஓங்கி இருந்தது. சென்னை அணியின் கோல் பகுதியை அடிக்கடி முற்றுகையிட்ட மும்பை அணிக்கு 32-வது நிமிடத்தில் பலன் கிட்டியது.

    கோல் பகுதியில் வைத்து மும்பை வீரர் சுனில் சேத்ரி தட்டிக்கொடுத்த பந்தை சக வீரர் மேத்யாஸ் டிபடெரிகோ (அர்ஜென்டினா) லாவகமாக செயல்பட்டு கோலாக மாற்றினார். நடப்பு சீசனில் இது 100-வது கோல் ஆகும். 44-வது நிமிடத்தில் பிரீ கிக் வாய்ப்பில் மும்பை கேப்டன் டியாகோ பார்லன் அடித்த ஷாட்டை, சென்னை கோல் கீப்பர் கரன்ஜித் சிங் பாய்ந்து விழுந்து முறியடித்தார்.

    பிற்பாதியில் சென்னை வீரர்கள் பதில் கோல் திருப்ப போராடினார்கள். ஆனால் அதற்குள் மும்பை அணி மேலும் கோல் போட்டு நிலைகுலைய வைத்தது. 60-வது நிமிடத்தில் மும்பை வீரர் கிறிஸ்டியன் வடோக்ஸ் (ஹங்கேரி) சற்று தூரத்தில் இருந்து கோல் நோக்கி உதைத்த ஷாட், கோல் கீப்பர் கரன்ஜித் சிங்கை ஏமாற்றி வலைக்கு முத்தமிட்டது. இதனால் உற்சாகமடைந்த மும்பை வீரர்கள் தாக்குதலை மேலும் துரிதப்படுத்தினர். 89-வது நிமிடத்தில் பந்துடன் கோல் பகுதியை நெருங்கிய மும்பை வீரர் டியாகோ பார்லன், பந்தை சக வீரர் தியாகோ குன்ஹாவிடம் தட்டிவிட அவர் அதை அடித்த போது சென்னை கோல் கீப்பர் கரன்ஜித் தடுத்து விட்டார். இல்லாவிட்டால் சென்னை அணியின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.

    முடிவில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சியை தோற்கடித்து 6-வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 22 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் மும்பை சிட்டி, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அந்த அணி அரைஇறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    இந்த தோல்வியால் சென்னையின் எப்.சி. அணி அரைஇறுதியை எட்டுவதில் சிக்கல் உருவாகியுள்ளது. 14 புள்ளிகளுடன் 7-வது இடம் வகிக்கும் சென்னையின் எப்.சி. அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் ஒரு சில முடிவுகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே சென்னையின் எப்.சி.யால் அரைஇறுதி சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

    படோர்டாவில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் லீக்கில் எப்.சி. கோவா- அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×