search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  இந்தியா - இங்கிலாந்து 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
  X

  இந்தியா - இங்கிலாந்து 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
  விசாகப்பட்டினம் :

  அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் தங்களை தீவிரமாக தயார்படுத்தியுள்ளனர்.

  இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும். காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட லோகேஷ் ராகுல், ரஞ்சி கிரிக்கெட்டில் கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்கு முன்பாகவே இந்திய அணிக்கு அழைக்கப்பட்டு இணைந்து விட்டார்.

  ‘முரளிவிஜயுடன் சேர்ந்து களம் இறங்குவதில் லோகேஷ் ராகுல் தான் எங்களது ‘நம்பர் ஒன்’ தொடக்க ஆட்டக்காரர். எனவே அவர் எப்போது குணமடைந்தாலும் அணிக்கு மீண்டும் திரும்பி விடுவார் என்பதில் தெளிவாக இருந்தோம். அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று காத்திருந்தோம். அதுவரை கம்பீருக்கு வாய்ப்பு கிடைத்தது. விதிமுறைக்குட்பட்டே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து பாதியில் ராகுல் வரவழைக்கப்பட்டுள்ளார். அவரது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்று இந்திய கேப்டன் கோலி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

  இதன் மூலம் விஜயுடன் லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவது உறுதியாகி விட்டது. முதலாவது டெஸ்டில் விளையாடிய மூத்த வீரர் கவுதம் கம்பீர் வெளியே உட்கார வைக்கப்படுகிறார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவே கருதப்படுகிறது.

  ராஜ்கோட் டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோரின் சுழலை எளிதாக சமாளித்த இங்கிலாந்து அணியினர் இரு இன்னிங்சிலும் சேர்த்து 4 சதங்கள் அடித்து நொறுக்கினர். ‘நம்பர் ஒன்’ பவுலர் அஸ்வின் 230 ரன்களை வாரி வழங்கி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்தது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி அதிருப்தி தெரிவித்தார்.

  இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் ‘வழக்கமான இந்திய ஆடுகளங்கள்’ (சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்) போன்று மாற்றப்பட்டுள்ளது. அதாவது 2-வது நாளில் பிற்பகலில் இருந்தே ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பும் என்று பிட்ச் பராமரிப்பாளர் கஸ்தூரி ஸ்ரீராம் கூறியுள்ளார். அதனால் இந்த டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்கம் கணிசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மிஸ்ரா கூட்டணி ஒருங்கிணைந்து மிரட்டினால் இங்கிலாந்தை ஒரு கை பார்த்து விடலாம். ஒரு வேளை மிஸ்ராவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறலாம்.

  முதலாவது டெஸ்டில் விளையாடிய விதம் இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. கடும் குடைச்சல் கொடுத்த இங்கிலாந்து பவுலர்கள், போராடியே இந்தியாவை டிரா செய்ய வைத்தனர். அந்த டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 9 விக்கெட் மட்டுமே வீழ்த்தினர். ஆனால் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினர். 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் 130 ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பினார். இதனால் இந்த டெஸ்டில் அந்த அணி வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

  ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் லேசான காயத்தால் அவதிப்படுகிறார். தொடர்ந்து இந்த டெஸ்டிலும் ஆடினால், காயம் பெரிதாகி விட வாய்ப்புள்ளது. அனேகமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். தோள்பட்டை பிரச்சினையால் மூன்று மாதங்களாக ஆடாத நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியுடன் கைகோர்த்து விட்டார். ஆனால் அவருக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

  ஆடுகளம் சுழலுக்கு ஏற்ற வகையில் அமையும் பட்சத்தில், அதில் தங்கள் பிடியை எப்படி இறுக்குவது என்பதற்கான யுக்திகளை இங்கிலாந்து வீரர்கள் தீட்டியுள்ளனர். இங்கிலாந்தும் மூன்று சுழற்பந்து வீச்சுடன் தாக்குதல் தொடுக்க ஆயத்தமாக இருப்பதால் இந்த டெஸ்டில் அனல் பறக்கலாம். இதில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இந்திய ஆடுகளங்களை பொறுத்தவரை முதலில் பேட் செய்து வலுவான ஸ்கோரை எடுத்து விட்டால் எதிரணியை அடக்குவது பெரிய விஷயம் அல்ல.

  தனிப்பட்ட முறையில் விராட் கோலி, ஜோ ரூட் ஆகியோருக்கு இது 50-வது டெஸ்ட் போட்டி என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

  விசாகப்பட்டினத்தில் டெஸ்ட் போட்டி அரங்கேற இருப்பது இதுவே முதல் முறையாகும். இது இந்தியாவின் 24-வது டெஸ்ட் மைதானமாகும். சமீபத்தில் இங்கு இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆடிய நியூசிலாந்து அணி 79 ரன்களில் சுருண்டதும், அதில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 5 விக்கெட்டுகள் அள்ளியதும் நினைவு கூரத்தக்கது.

  போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

  இந்தியா: லோகேஷ் ராகுல், எம்.விஜய், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, அஸ்வின், விருத்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா அல்லது ஹர்திக் பாண்ட்யா அல்லது ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ் அல்லது இஷாந்த் ஷர்மா.

  இங்கிலாந்து: அலஸ்டயர் குக் (கேப்டன்), ஹசீப் ஹமீத், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், டக்கெட், மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் அல்லது ஜேம்ஸ் ஆண்டர்சன் அல்லது ஸ்டீவன் பின், ஜாபர் அன்சாரி, அடில் ரஷித்.

  காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
  Next Story
  ×