search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலி ஆட்டத்தால் ராஜ்கோட் டெஸ்ட் டிராவில் முடிந்தது
    X

    கோலி ஆட்டத்தால் ராஜ்கோட் டெஸ்ட் டிராவில் முடிந்தது

    ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விராட் கோலியின் தடுப்பு ஆட்டத்தால் டிராவில் முடிந்தது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 9-ந்தேதி சவுராஷ்டிராவில் உள்ள ராஜ்கோட்டில் தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் மூன்று பேட்ஸ்மேன்கள் சதம் அடிக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, முரளி விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் சதம் அடிக்க, அஸ்வின் 70 ரன்கள் எடுக்க 488 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    49 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேப்டன் குக் சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் 49 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணி 309 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 310 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

    49 ஓவரில் 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்திய ஆடுகளத்தில் கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு ஓவருக்கு 6 ரன்கள் அடிப்பது கடினம் என்பதால் போட்டியை டிரா நோக்கி கொண்டு செல்லலாம் என்ற எண்ணத்தில் முரளி விஜயும், காம்பீரும் 2-வது இன்னிங்சை தொடங்கினார்கள்.

    ஆட்டத்தின் 2-வது ஓவரில் காம்பீர் ரன்ஏதும் எடுக்காமல் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து முரளி விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 47 ரன்னாக இருக்கும்போது புஜாரா 18 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்தி்ல் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார்கள். முரளி விஜய் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரகானே 1 ரன் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் க்ளீன் போல்டானார். இதனால் இந்தியா 71 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு கோலியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். விராட் கோலியுடன் அஸ்வின் இணைந்து அணியை டிரா நோக்கி அழைத்துச் சென்றார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்த ஜோடி போட்டியை டிராவில் முடித்துவிடும் என்று நினைக்கையில் அஸ்வின் 32 ரன்கள் எடுத்த நிலையில் அன்சாரி பந்தில் ஆட்டம் இழந்தார்.

    இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்து வந்த சகா 9 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் மறுமுனையில் விராட் கோலி மட்டும் நம்பிக்கையுடன் விளையாடினார்.

    7-வது விக்கெட்டுக்கு கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அப்போது இந்தியா 6 ஓவர்களை தாக்குப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருவரும் 6 ஓவர்களை தாக்குப்பிடித்து விளையாடினார்கள். 4.30 மணிக்கு முன்பே 49 ஓவர்களையும் இங்கிலாந்து வீசி முடித்ததால், இங்கிலாந்திற்கு கூடுதலாக 3 ஓவர்கள் வழங்கப்பட்டது.

    கடைசி 3 ஓவரையும் விராட் கோலி, ஜடேஜா சிறப்பாக சமாளித்தனர். கடைசி ஓவரின் 3-வது பந்தில் விராட் கோலி ஒரு ரன் அடிக்க அதன்பின் 3 பந்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற முடியாது என்பதால் இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதனால் ராஜ்கோட் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    2-வது இன்னிங்சில் இந்தியா 52.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 49 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 32 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
    Next Story
    ×