search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்திக்கு தடகள பயிற்சியாளர் பதவி
    X

    முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்திக்கு தடகள பயிற்சியாளர் பதவி

    முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்திக்கு, தடகள பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    சென்னை :

    புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 35). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சாந்தி தடகள வீராங்கனையாக உருவெடுத்து வெற்றிகளை குவித்தார். 2006-ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

    பின்னர் பாலின சர்ச்சையில் (ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக புகார்) சிக்கியதால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டதுடன், போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.

    இருப்பினும் தமிழக அரசு அவருக்கு புதுக்கோட்டையில் தற்காலிக தடகள பயிற்சியாளர் பணி வழங்கியது. பயிற்சியாளர் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல முறை வலியுறுத்திய போதிலும் அது ஏற்கப்படாததால் 2010-ம் ஆண்டு அப்பணியை ராஜினாமா செய்து விட்டு பெற்றோருடன் மீண்டும் செங்கல் சூளையில் தினக்கூலியாக சிறிது காலம் வேலை செய்தார்.

    இதற்கிடையே, பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (சாய்) பயிற்சி மையத்தில் தடகள பயிற்சியாளருக்கான பட்டய படிப்பை படித்த சாந்தி பிறகு மயிலாடுதுறையில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெற்றதோடு, அங்கேயே 2014-ம் ஆண்டு ஜூலையில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சாந்தியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) தடகள பயிற்சியாளராக நியமனம் செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து சாந்தி நேற்று கூறுகையில், ‘எனக்கு பயிற்சியாளர் பணி கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. பிறகு தமிழக அமைச்சரின் உதவியாளர் என்னை தொடர்பு கொண்டு தங்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் எந்த ஊரில் என்ன பணி என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. பணி ஆணை வந்த பிறகுதான் அதுபற்றி தெரியும். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் எனக்கு அரசு பணி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
    Next Story
    ×